தமிழகத்தில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு புதிதாக விதிக்கப்பட்டுள்ள வரிகளின் படி தமிழக படங்களுக்கு 10 சதவீதமும் இதர மொழி படங்களுக்கு 20 சதவீதமும் தமிழக அரசு கேளிக்கை வரி விதித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் அதிர்ச்சியடைந் தமிழ் திரையுளகினர், இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.


கூட்டம் முடிந்து தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-


"தமிழ்த் திரைப்படத்துறையில் ஏற்கனவே ’பைரசி’ முதற்கொண்டு சமீபத்தில் விதிக்கப்பட்ட 18% / 28% ஜிஸ்டி என பல்வேறு காரணங்களால் பெருத்த இழப்பினை தயாரிப்பாளர்கள் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக அரசால் கடந்த 27.09.2017 அன்று தமிழ்ப்படங்களுக்கு அறிவித்த 10% கூடுதல் கேளிக்கை வரி தயாரிப்பாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


மேலும், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரைத்துறை சார்ந்த அமைப்புகள் சார்பில் கடந்த மாதம் தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களிலும் மற்றும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் பலமுறை எங்களது தரப்பில் உள்ள விளக்கங்களை அளித்தோம். இருந்தும், பல ஆண்டுகளாக முறைப்படுத்தப்படாமல் உள்ள திரையரங்கு நுழைவு கட்டணத்தினை முறைப்படுத்தாமல் 10% கேளிக்கை வரி மட்டும் விதித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபாரத்தில் பெரும் இழப்புகளையும், குழப்பங்களையும் மட்டுமே தொடர்ந்து ஏற்படுத்தும்.


இது சம்பந்தமாக இன்று (அக்டோபர் 3) தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற அனைத்து தயாரிப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திரையரங்கு கட்டணத்தினை முறைப்படுத்தி மேற்கண்ட கேளிக்கை வரியை தமிழ் படங்களுக்கு முற்றிலும் விலக்கிட வேண்டுமென்று அரசிற்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதனால், வருகிற வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்"


என தெரிவித்துள்ளனர்.