பாரதிராஜா இயக்கத்தில் 1984-ம் ஆண்டு வெளிவந்த 'புதுமைப் பெண்' படத்தில் வில்லனாக அறிமுகமானவர் டாக்டர் ராஜசேகர். இதையடுத்து, தெலுங்குத் திரையுலகத்தில் அறிமுகமாகி முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இவர் இருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜசேகர் தெலுங்கில் நடித்த 'அங்குசம்' படம் தமிழில் 'இதுதான்டா போலீஸ்' என மொழி பெயர்த்து பெரும் வெற்றியைப் பெற்றது. அவரது மனைவி நடிகை ஜீவிதா. இவரும் 'உறவைக் காத்த கிளி' தமிழ்ப் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.


இவர்களின் மகள் ஷிவானி டாக்டருக்குப் படித்து வருகிறார். இவர் தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் இட்டுள்ளார். அதைத் தொடர்ந்து தமிழிலும் அறிமுகமாக உள்ளார். விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்க அறிமுக இயக்குனர் வெங்கடேஷ் இயக்க உள்ள புதிய படத்தில் ஷிவானி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.


இப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகர் க்ரிஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். விஷ்ணு விஷால் ஜோடியாக ராஜசேகர் மகள் ஷிவானி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இதையடுத்து, ஷிவானியை தன் படத்தில் ஜோடியாக அறிமுகப்படுத்த உள்ள விஷ்ணு விஷால் "விஷ்ணு விஷாஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் நான்காவது படத்தில் நாயகியாக அறிமுகமாக உள்ள ஷிவானி ராஜசேகரை தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் திரையுலகிற்கு வரவேற்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.