நடிகர் அஜித்தின் சங்கடமும் ரசிகர்களின் குமுறலும்… இதில் முதலமைச்சருக்கு என்ன சம்பந்தம்?
ரசிகர்கள் பொதுவெளியிலும் சமூக வலைத்தளத்திலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என்று நடிகர் அஜித் தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் பின்னணி என்ன?
நடிகர் அஜித் நடிக்கும் வலிமை திரைப்பட அப்டேட் கேட்டு பல்வேறு இடங்களில் ரசிகர்கள் செய்துவரும் செயல் வருத்தமுறச் செய்வதாக கூறியுள்ள நடிகர் அஜித், ”ரசிகர்கள் பொதுவெளியிலும் சமூக வலைத்தளத்திலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் அஜித் குமாருடைய 60வது படம் வலிமை. இந்த திரைப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக படத் தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டது.
கொரோனாவில் இருந்து உலகம் மீண்டு வரும் நிலையில் திரைப்படங்களின் படபிடிப்புகள் தொடங்க சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ‘வலிமை’ திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
Also Read | 'ருத்ர தாண்டவம்' படத்தில் வில்லனாக நடிக்கும் Director கௌதம் மேனன்
ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் தல அஜித் நடிக்கும் வலிமை படத்தின் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று ரசிகர்களுக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது.
அதிலும், தளபதில் விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் இதே காலகட்டத்தில் வெளியாகி சக்கைப்போடு போடுவதைப் பார்த்து அஜித்தின் ரசிகர்கள் நொந்து போயிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அஜித்தின் தீவிர ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் பற்றி சமூக வலைத்தளங்களில் கேட்டுக்கொண்டிருந்தனர்.
படக்குழுவினர் வலிமை படத்தைப் பற்றி உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று திரைப்பட தயாரிப்புக் குழுவினர் தெரிவித்தாலும், ரசிகர்களின் ஆர்வம் விபரீதமாகிவிட்டது. சிலர் சமூக வலைத்தளங்களில் வலிமை அப்டேட் எப்போது வரும் என்று முதல்வர் பழனிசாமியிடமே கேட்கும் அளவிற்கு சென்றுவிட்டனர்.
Also Read | வெங்கட் பிரபுவும் காஜல் அகர்வாலும் இணைந்து கலக்கும் Live Telecast
நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக இது குறித்து நடிகர் அஜித் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“என் மீதும் என் படங்களின் மீதும் அபரிமிதமான அன்புக் கொண்டு இருக்கும் ரசிகர்கள், எதையும் எதிர்பாராத அன்பு செலுத்துகின்றனர். எனது உண்மையான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.
கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் ‘வலிமை’ சம்பந்தப்பட்ட அப்டேட் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டுத் துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்களிடம், பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.
இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும் சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், “பிப்ரவரி 15-ம் தேதி ‘வலிமை’ படத்தின் படபிடிப்பு முடிவடையும் என சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், முதல்முறையாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து வலிமை திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். “வலிமை படத்துக்காக நீங்கள் காண்பித்து வரும் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விரைவில் வெளியிட உள்ளதால் சற்று பொறுமையாக இருக்கவும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Also Read | சித்தி 2 சீரியலில் இருந்து நடிகை ராதிகா விலகிய காரணம் என்ன?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR