இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்‌சவின் தலைமையில் நடைபெற்ற 5 ஆவது பிம்ஸ்டெக் அரசதலைவர்கள் மாநாட்டில் நேற்று உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அத்தியாவசியமான பல முக்கிய அம்சங்களை முன்னெடுத்து வைத்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்சிமாநாடில் உறுப்புநாடுகளின் அங்கீகாரத்துடன் பிம்ஸ்டெக் சாசனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த உச்சிமாநாட்டின் போது வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பூட்டான் பிரதமர் லொற்றே ஷெரிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தாய்லாந்து பிரதமர் ப்ரயுத் சான்-ஓ-சா, நேபாள பிரதமர் ஷேர் பஹதூர் டுபா, மியன்மார் வெளிவிவகார அமைச்சர் வுன்னா மொன்ங் ல்வின் மற்றும் பிம்ஸ்டெக் அமைப்பின் செயலாளர் நாயகம் ஆகியோர் உரையாற்றினர்.


இங்கு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிம்ஸ்டெக் அமைப்பின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பிம்ஸ்டெக் செயலகத்திற்கு ஒரு மில்லியன் டாலர் நிதியை வழங்குவதாக அறிவித்தார்.


பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் 5 ஆவது மாநாட்டின் 3 ஆம் நாள் நிகழ்வான அரச தலைவர்கள் மாநாடு கொழும்பில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 


இலங்கை, இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூட்டான், தாய்லாந்து மற்றும் மியன்மார் ஆகிய 7 நாடுகள் அங்கம்வகிக்கும் இந்த பிம்ஸ்டெக் அமைப்பின் 5 ஆவது மாநாடு திங்கட்கிழமை, அதாவது மார்ச் 28 ஆம் தேதி ஆரம்பமான நிலையில், மாநாட்டின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 18 ஆவது அமைச்சுமட்டக்கூட்டத்தில் உறுப்பு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.


அதன்படி வங்கதேசம், பூட்டான், இந்தியா, நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களான (முறையே) ஏ.கே.அப்துல் மொமென், தன்டி டோர்ஜி, எஸ்.ஜெய்சங்கர், நாராயண் கட்கா, டொன் ப்ரமுத்வினை ஆகியோர் மாநாட்டில் பங்கேற்றனர். மியன்மார் சார்பில் அந்நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலந்துகொண்டார்.


இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் உரையுடன் இம்மாநாடு ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து ஏனைய உறுப்புநாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் உரைகளும் இடம்பெறவிருந்த போதிலும், அமைச்சர் பீரிஸின் உரையைப் பார்வையிடுவதற்கு மட்டுமே செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.


இந்த பின்னணியில் மாநாட்டின் மூன்றாம் நாளான புதன்கிழமை (மார்ச் 30) காலை 9 மணிக்கு பிம்ஸ்டெக் அமைப்பின் 5 ஆவது அரசதலைவர்கள் மாநாடு ஆரம்பமாகியது.


மேலும் படிக்க | இலங்கையுடன் இந்தியா 6 உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளது!


இதில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச மெய்நிகர் முறைமையில் உரை நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து உறுப்புநாடுகளின் அரசதலைவர்களும் மெய்நிகர் முறையில் உரையாற்றினர்.


அத்தோடு இம்மாநாட்டில் பிம்ஸ்டெக் சாசனம் ஏற்கப்பட்டு, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்து இடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் ஐந்தாவது அரச தலைவர்கள் சந்திப்பில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், "ஐரோப்பாவின் சமீபத்திய முன்னேற்றங்கள் சர்வதேச ஒழுங்கின் ஸ்திரத்தன்மை குறித்து கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளன" என்று குறிப்பிட்டார். பிம்ஸ்டெக் நாடுகளுக்கு இடையே அதிக ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, வங்காள விரிகுடாவை "இணைப்பின் பாலமாக மாற்றுவதற்கான நேரம் இது" என்றார். பிம்ஸ்டெக் செயலகத்தின் பட்ஜெட்டை அதிகரிக்க இந்தியா 1 மில்லியன் டாலர் உதவி அளிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.


மாநாட்டில் பேசிய இலங்கை அதிபர் கோட்டாபாய ராஜபக்ச, ‘மத அடிப்படைவாதம், பயங்கரவாதம், மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட விஷயங்களில் இருந்து இப்பகுதிகளை பாதுகாக்க வேண்டும். மேலும், வங்காள விரிகுடா பிராந்தியங்களின் பொருளாதாரம் பூலோக பொருளாதாரத்துக்கு ஒரு உந்துசக்தியாக அமைந்துள்ளது’ என குறிப்பிட்டார்.


மேலும் படிக்க | ஷாபாஸ் ஷெரீப் "விரைவில்" பாகிஸ்தான் பிரதமராவார்: பிலாவல் பூட்டோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR