பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்ட UAE-இந்தியா இண்டிகோ விமானம்; காரணம் என்ன?
கடந்த வாரம் ஸ்பைஸ்ஜெட் விமானம் காராச்சிக்கு திருப்பி விடப்பட்ட நிலையில், தற்போது இண்டிகோ விமானமும் பாகிஸ்தானிற்கு திருப்பி விடப்பட்டது.
ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானத்தில், விமானி தொழில்நுட்பக் கோளாறைக் கண்டறிந்ததை அடுத்து, இண்டிகோ 6E-1406 விமானம், கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. தேவையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, முன்னெச்சரிக்கையாக, விமானம் கராச்சிக்குத் திருப்பி விடப்பட்டது என இண்டிகோ செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு மீரகத்தில் இருந்து வந்த ஹைதராபாத் பயணிகளை ஏற்றிச் செல்ல கூடுதல் விமானம் கராச்சிக்கு அனுப்பப்படுகிறது என இண்டிகோ விமான நிறுவனம் கூறியுள்ளது. இரண்டு வாரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கராச்சிக்கு திருப்பி விடப்படும் இரண்டாவது இந்திய விமான நிறுவனம் இதுவாகும்.
முன்னதாக, ஜூலை 5 ஆம் தேதி, புதுதில்லியில் இருந்து துபாய் நோக்கிச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது ஐக்கிய அரபு அமீரகம் - இந்தியா இடையிலான விமானங்கள் பாகிஸ்தானிற்கு திருப்பி விடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சுமார் 900 இண்டிகோ விமானங்கள் தாமதம்; விளக்கம் கோரும் DGCA
டெல்லியில் இருந்து துபாய் சென்று கொண்டிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் போயிங் 737 இன்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டு தரையிறங்கியது. ஜூலை 5, 2022 அன்று, ஸ்பைஸ்ஜெட் B737 விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது இடதுபுற எரிபொருள் டேங்க்கில் எரிபொருள் வழக்கத்துக்கு மாறாக குறைவாக இருப்பதாக இன்டிகேட்டர் காட்டியது. அதைத் தொடர்ந்து அது கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது.
விமானம் கராச்சியில் பத்திரமாக தரையிறககப்பட்டு பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர். அவசரநிலை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே விமானம் கராச்சி விமான நிலையத்தில் சாதாரண தரையிறக்கப்பட்டது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மாத தொடக்கத்தில் நாடு முழுவதும் சுமார் 900 இண்டிகோ விமானங்கள் தாமதமாகின. விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) விமான நிறுவனத்திடம் இருந்து இவ்வளவு அதிகமான விமானங்கள் தாமதம் ஆனது ஏன் என்பது குறித்து விளக்கம் கோரியுள்ளது.
மேலும் படிக்க | சிக்கலில் SpiceJet நிறுவனம், 17 நாட்களில் நடந்த 7 அதிர்ச்சி சம்பவங்கள்