தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்!
நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பிறகு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது கண்டன தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில் காங்கிரஸ்!
டெல்லி: நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பிறகு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது கண்டன தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடந்து வரும் நிலையில், இக்கூட்டத் தொடரிலேயே மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதன் பின் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக, நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மற்ற கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளது.
தீபக் மிஸ்ரா நீதித்துறை நிர்வாகத்தை தவறாக பயன்படுத்துகிறார் எனவும் சக நீதிபதிகளின் அதிருப்திக்கு ஆளானவர் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளை ஆதாரமாக வைத்து காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கையெழுத்து இயக்கத்தையும் துவக்கியுள்ளனர்.
இதில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எம்.பி-க்கள் கையெழுத்திட்டுள்ளனர். காங்கிரஸ்-ன் இம்முயற்சிக்கு கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் சில எதிர்க்கட்சிகளும் ஆதரவு தராது என்றும் கூறப்படுகிறது. முன்னதாக தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இடது சாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது காங்கிரஸ் கண்டன தீர்மானம் கொண்டுவர உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மற்றவர்கள் கூறும்போது, ''பா.ஜ.க அரசு மீது தொடர்ந்து ஏதாவது அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் நினைக்கிறது. முடிந்தால், வரும் பொதுத் தேர்தலுக்கு முன், தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்துள்ளது.
பார்லிமென்டில் பா.ஜ.க-வுக்கு நல்ல மதிப்பு இருக்கும் நிலையில் தனது ஆசை நிறைவேறாது என காங்கிரஸ்-க்கும் நன்கு தெரியும். இருந்தாலும் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் காங்கிரஸ்-ன் நோக்கமே தவிர வேறில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தருவது சந்தேகம் தான்''.