பங்குனி உத்தரம் என்பது முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12-ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.


இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள். 


சிறப்பு:-


இத்தினத்தில் பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தார். ராமன், சீதையை கரம் பிடித்தார். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர், ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது. 


இந்நாளில் சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது.


அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி அமைந்து இருக்கும் பழனியில் பங்குனி மாதம் உத்தரம் நட்சத்திர திதியில் நடைபெறும் விழா பங்குனி உத்தரம் ஆகும். அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்தரம் வீழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.