காவிரி விவகாரத்தில் விழிப்புடன் செயல்பட்டு மத்திய அரசின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் வகையில் மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கும் அரசியல் நடவடிக்கைகளை தமிழகம் மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான அமைப்பு குறித்த வரைவுத் திட்டத்தை அடுத்த மாதம் 3-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், இந்த முறையும் தமிழகத்திற்கு துரோகம் செய்ய மத்திய அரசு ஆயத்தமாகி வருவதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பான மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி. சிங்கின் கருத்து இதை உறுதி செய்கிறது.


மாநிலம் தழுவிய போராட்டத்தில் பாமக -அதன் புகைப்படம் & வீடியோ


உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரிக்கான செயல்திட்டத்தை மத்திய அரசு வரும் 3-ஆம் தேதிக்குள் தயாரித்து தாக்கல் செய்யுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் தெரிவித்தக் கருத்துகள் இந்தப் பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாடு கொஞ்சமும் மாறாது என்பதை உறுதி செய்வதாக உள்ளன. ‘‘ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நடுவர் மன்றம் கூறியிருப்பதாலேயே, அதை அமைக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெறும் பரிந்துரை தான். நாங்கள் அமைக்கவிருக்கும் அமைப்பு எப்படிப் பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது நீதி அமைப்பாகவும் இருக்கலாம், நிர்வாக அமைப்பாகவும் இருக்கலாம். அதன் தலைவராக யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம்’’ என்று யு.பி.சிங் கூறியுள்ளார்.


காவிரி விவகாரத்தில் பொம்மலாட்டம் போடும் தமிழக அரசு -ராமதாஸ் தாக்கு


காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என்பது கடந்த மாதமே உறுதியாகி விட்ட நிலையில், அதற்கு இணையான அமைப்பைக் கூட மத்திட அரசு அமைக்காது என்பதைத் தான் நீர்வளத்துறை செயலாளர் மறைமுகமாகக் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அல்லது அதற்கு இணையான அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்கு அடிப்படையே நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தான். காவிரி நீரை பகிர்ந்தளிக்கும் அதிகாரத்தை அணைகள் அமைந்துள்ள மாநிலத்திடமே விட்டு வைப்பது பிரச்சினையை தீர்க்காது என்பதால் தான் அதற்கான தன்னாட்சி அமைப்பு ஒன்றை உருவாக்கும் வகையில் பக்ரா பியாஸ் வாரியம் போன்று காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று நடுவர் மன்றம் கூறியிருந்தது.


அதுமட்டுமின்றி, மத்திய, மாநில அரசுகளின் குறுக்கீடு இல்லாமல் அந்த அமைப்பு செயல்பட வேண்டும் என்பதற்காகவும், நடுவர் மன்றத் தீர்ப்பு செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிடும் அமைப்பாக இல்லாமல், தீர்ப்பை செயல்படுத்தும் அமைப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தான் அது முழுக்க, முழுக்க தொழில்நுட்ப அமைப்பாக செயல்பட வேண்டும் என்று நடுவர் மன்றம் அதன் இறுதித் தீர்ப்பில் தெளிவாக கூறியிருந்தது. ஆனால், காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு நீதி கிடைப்பதற்கான இந்த அடிப்படைகளை தகர்க்க வேண்டும் என்பதற்காகத் தான் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு ஆணை அல்ல... பரிந்துரை என்ற வாதத்தை நீர்வளத்துறை செயலர் முன்வைக்கிறார். இது ஆபத்தானது.


எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் எடுபடாது - ராமதாஸ் தாக்கு


இதற்கெல்லாம் மேலாக, காவிரி நீர்ப்பகிர்வுக்கான குழு தொழில்நுட்பக் குழுவாக இருக்க வேண்டும் என்பதை அடியோடு மறைத்து விட்டு, அது நீதி அமைப்பாகவோ அல்லது நிர்வாக அமைப்பாகவோ இருக்கும் என்றும் யு.பி.சிங் கூறியிருக்கிறார். இது எவ்வளவு நயவஞ்சகமான நிலைப்பாடு என்பதை நான் விளக்குகிறேன். தொழில்நுட்பக்குழு என்றால் அது நீர்ப்பாசனத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் கூடுதலாக அனுபவம் பெற்ற வல்லுனர் ஒருவர் தலைமையில் அமையும். அந்த அமைப்பு காவிரியில் உள்ள அனைத்து அணைகளையும் அதன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு காவிரி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கும். இது தான் பிரச்சினையைத் தீர்க்க உண்மையான வழியாகும்.


மாறாக, மத்திய நீர்வளத்துறை செயலாளர் கூறுவதைப் போன்று நீதி அல்லது நிர்வாக அமைப்பாக இருந்தால் அது அணைகளை அதன் கைகளில் எடுத்துக் கொள்ளாது; அவை கர்நாடகத்தின் பிடியில் தான் இருக்கும். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை என்றால் அதை எதிர்த்து, மத்திய அரசால் அமைக்கப்படும் நீதி அல்லது நிர்வாக அமைப்பில் தமிழகம் முறையிட வேண்டும். அதை விசாரிக்கும் அமைப்பு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க ஆணையிடும். ஆனாலும் அதை கர்நாடகம் மதிக்காது. அதை எதிர்த்து தமிழகம் உச்சநீதிமன்றத்திற்கு செல்ல நேரிடும். அதற்குள் கர்நாடகம் இருக்கும் தண்ணீரை முழுமையாக பயன்படுத்தி விட்டு, தண்ணீர் இல்லை என்று கூறும். தொழில்நுட்பக் குழு அமைக்காமல் நீதி அல்லது நிர்வாக அமைப்பை அமைத்தால் இது தான் நடக்கும்.


அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்: பாமக போராட்டம்!


காவிரிப் பிரச்சினை 100 ஆண்டுகளுக்கு முன்பு எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலைக்கு மீண்டும் கொண்டு செல்வது தான் மத்திய அரசின் நோக்கம் ஆகும். அதற்கேற்ற வகையில் ஒரு சொத்தையான அமைப்பை உருவாக்கும் திட்டத்தை தான் வரும் மே 3-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யப்போகிறது என்பது யு.பி.சிங்கின் நேர்காணல் மூலம் தெளிவாகி விட்டது. இவ்விஷயத்தில் மத்திய அரசு தெரிந்தே தவறு செய்கிறது. 


இதனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நீதி கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருப்பது இலவு காத்தக் கிளியின் கதையாக மாறி விடும். கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக இந்த துரோகத்தை செய்யும் மத்திய அரசு, அதன் அடித்தளத்துக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழகத்திற்கு நீதி வழங்கும்.


எனவே, காவிரி பிரச்சினையில் போராடியது போதும் என்ற எண்ணத்திற்கு தமிழகம் வந்துவிடக்கூடாது. மாறாக கூடுதல் விழிப்புடன் செயல்பட்டு மத்திய அரசின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் வகையில் மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கும் அரசியல் நடவடிக்கைகளை தமிழகம் மேற்கொள்ள வேண்டும்.


இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.