மத்திய அரசு ஊழியர்களுக்கு தித்திக்கும் தீபாவளி பரிசு: அகவிலைப்படி உயர்வு எவ்வளவு? முழு கணக்கீடு இதோ
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு விரைவில் தீபாவளி பரிசை அறிவிக்க உள்ளது. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் இந்த ஆண்டுக்கான இரண்டாவது அதிகரிப்பை அரசாங்கம் விரைவில் அறிவிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7வது ஊதியக் குழு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணத்தை 3%-4% அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகின்றது. இதன் பிறகு மொத்த டிஏ (DA) மற்றும் டிஆர் (DR) 53%-54% ஆக அதிகரிக்கும். தற்போது ஊழியர்கள் 50% அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள்.
அகவிலைப்படி, தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படும் ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றது. ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் டிஏ, டிஆர் -இல் திருத்தங்கள் செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணமும், ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணமும் தீர்மானிக்கப்படுகின்றன.
அகவிலைப்படி உயர்வுக்காக மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். அகவிலைப்படி உயர்வை அறிவிப்பதில் அரசு காட்டும் தாமதம் ஊழியர்களையும் ஓய்வூதியதாரர்களையும் பாதித்துள்ளது. ஊழியர் சங்கங்களும் இது குறித்து அதிருப்தியை தெரிவித்து வருகின்றன. ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு முன்னர் செப்டம்பர் மாதமே வந்துவிடும் என்றும் இப்போதெல்லாம் அதில் தாமதம் ஏற்படுகிறது என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
டிஏ உயர்வு (DA Hike) அறிவிப்பை தாமதமாக வெளியிடுவதன் மூலம் அரசாங்கமே நல்ல லாபம் ஈட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி அதிகரிக்கப்படும்போது அரசாங்கத்தின் மீது பொருளாதார சுமை அதிகமாகிறது. இந்த சூழ்நிலையில் மூன்று அல்லது நான்கு மாதங்கள் தாமதமாக இந்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிடுகிறது. இந்த காலகட்டத்தில் இந்தப் பணம் அரசாங்கத்தால் முதலீடு செய்யப்பட்டு அதற்கு நல்ல வட்டி கிடைக்கிறது. அரசு டிஏ ஹைக் அறிவிப்பை வெளியிட தாமதப்படுத்துவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
எப்படியும் இந்த ஆண்டு தீபாவளிக்கு முன் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அகவிலைப்படி அதிகரிப்புக்கான நல்ல செய்தியை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பள உயர்வு: ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் (Basic Salary) 18,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அகவிலைப்படி 3% அதிகரித்தால் அவருக்கு சம்பளத்தில் ரூ.540 மாத அதிகரிப்பு இருக்கும். ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும். அகவிலைப்படி 4% அதிகரித்தால், அவரது மாத சம்பளத்தில் 720 ரூபாய் அதிகரிப்பு இருக்கும். ஆண்டு சம்பளம் ரூ.7,440 அதிகரிக்கும்.
சம்பள உயர்வு கணக்கீடு: மாதச் சம்பளம் ரூ.50,000 உள்ள ஊழியர்களுக்கான கணக்கீட்டை காணலாம். அகவிலைப்படி 3% அதிகரித்தால், அவர்களுக்கு மாதா மாதம் சம்பளத்தில் ரூ.1,500 கூடுதலாக வரும். ஆண்டுக்கு இந்த உயர்வு ரூ.18,000 ஆக இருக்கும். இந்த தொகை பல்வேறு லெவல் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.
அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு எப்போது வந்தாலும், ஜூலை முதலான டிஏ அரியர் தொகையும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும். இதன் காரணமாக அடுத்த மாத சம்பளத்தில் ஒரு பெரிய தொகையை பெறுவார்கள்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.