மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்? அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா 53% அகவிலைப்படி?
தீபாவளிக்கு முன், மத்திய நரேந்திர மோடி அரசு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி அறிவித்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகைலை நிவாரணம் என இரண்டும் 53% ஆக உயர்ந்தன.
7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அடுத்ததாக ஜனவரி மாதம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) இரண்டிலும் திருத்தம் செய்யப்படும். இந்த உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது பற்றிய பேச்சுகள் இப்போது தொடங்கிவிட்டன.
அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு செப்டம்பர் 2024 இல் 0.07 புள்ளிகள் அதிகரித்து 143.3 புள்ளிகளை எட்டியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஜூலை மாதத்தில் பணவீக்கக் குறியீடு 142.7 புள்ளிகளாகவும், ஆகஸ்டில் 142.6 புள்ளிகளாகவும் இருந்தன. இதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ -வில் ஏற்கனவே ஏற்றம் ஏற்பட்டுள்ளது. வரவிருக்கும் மாதங்களில் இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆண்டுக்கு இரு முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணத்தில் திருத்தம் செய்யப்படுகின்றது. இந்த திருத்தம் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்காளில் நடக்கின்றது.
தொழிலாளர் அம்மைச்சகம் வழங்கும் அகவிலைப்படி உயர்வு விதிகள் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில், அதாவது ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ (DA) தீர்மானிக்கப்படுகின்றது. முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும், ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்களும் தீர்மானிக்கப்படுகின்றன.
ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வை பற்றிய கணிப்பு ஒரு புறம் இருக்க, மற்றொரு விவாதமும் இப்போது சூடுபிடித்துள்ளது. 2025 ஜனவரியில் அகவிலைப்படி திருத்தம் செய்யப்படுவதற்கு முன்பு, தற்போது உயர்த்தப்பட்ட டிஏ (DA) ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இணைக்கப்படுமா என்பது தொடர்பான பேச்சுக்கள் இப்போது தீவிரமடைந்துள்ளன.
அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டால், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் மாற்றம் ஏற்படும். அக்டோபர் 16 அன்று, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. உயர்வுக்குப் பிறகு, அடிப்படை ஊதியத்துடன் டிஏவை இணைப்பது குறித்து விவாதம் தொடங்கியது.
இப்படிபட்ட விவாதம் தொடங்குவது இது முதல் முறை அல்ல. முன்னதாக ஐந்தாவது மற்றும் ஆறாவது ஊதியக் குழுவில், அகவிலைப்படி 50% ஐத் தாண்டியபோது இந்தப் பரிந்துரை செய்யப்பட்டது. தற்போதும் அப்படி செய்யப்படுமா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தற்போது இது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது அகவிலைப்படி 53 சதவீதம் வழங்கப்படுகிறது. அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்டால், சம்பள அமைப்பில் நிரந்தர மாற்றங்கள் ஏற்படும். அதன் விளைவு ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளிலும் தெரியும். பொதுவாக இந்த அறிவிப்புகள் ஆண்டின் மார்ச் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் வெளியிடப்படும். இவை முறையே ஜனவரி மற்றும் ஜூலை முதல் அமலுக்கு வரும்.
இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 8வது ஊதியக்குழுவுக்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானால் வரலாம் என கூறப்படுகின்றது. இதற்காக ஊழியர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்த மாதம் விவாதங்கள் தொடங்கலாம் என கூறப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.