மத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு முன் தீபாவளி? காத்திருக்கும் குட் நியூஸ்
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த அறிவிப்பு விரைவில் வரவுள்ளது. ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய தெளிவு தற்போது கிடைத்துள்ளது.
சமீபத்தில் வெளிவந்த டிசம்பர் மாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் 2024 ஜனவரி முதல் ஊழியர்களின் அகவிலைப்படியும் (Dearness Allowance) ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் 4% அதிகரிக்கும் என்பது தெளிவாகியுள்ளது. இதன் பிறகு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 50% ஆக உயரும்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி / அகவிலை நிவாரணத்தின் விகிதங்களை ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு திருத்துகிறது. தொழிலாளர் அமைச்சகம் வெளியிடும் அரையாண்டுத் தரவைப் பொறுத்து இதில் திருத்தம் செய்யப்படுகின்றது.
அகவிலைப்படி அதிகரிப்பு குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வரும் என கூறப்படுகின்றது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துவிட்டால், அதன் பிறகு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். ஆகையால், அதற்கு முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகும்.
மார்ச் மாதம் டிஏ ஹைக் பற்றி அறிவிக்கப்பட்டால், ஊழியர்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத அகவிலைப்படி உயர்வின் அரியர் தொகையையும் சேர்த்து மார்ச் மாத சம்பளத்துடன் பெறுவார்கள். இதனால் அவர்களது மார்ச் மாத ஊதியத்தில் பம்பர் வருமானம் இருக்கும்.
அகவிலைப்படு 50% -ஐ எட்டினால் சம்பள திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆகையால், இந்த அறிவிப்பு வந்தவுடன் ஊழியர்களுக்கு ஊதிய திருத்தமும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டினால், அதன் பிறகு அகவிலைப்படி பூஜ்ஜியமாக்கப்பட்டு, அதன் தொகை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும். அதன் பிறகு ஊழியர்களின் அடிப்படை ஊதியமும் மிகப்பெரிய ஏற்றத்தை காணும்.