காத்திருக்கும் அரசு ஊழியர்கள்... அகவிலைப்படி உயர்வு எப்போது? - விரைவில் வரும் அப்டேட்!
தற்போது 7ஆவது ஊதியக் குழுவின் (7th Pay Commission) கீழ் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதியம், அகவிலைப்படி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்தி (Dearness Allowance Hike) உத்தரவிட்டது. இதனால், 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
மேலும், இந்த அகவிலைப்படி தொகை கடந்த ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட்டு, ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகையும் ஊதியத்துடன் வழங்கப்பட்டது.
மத்திய அரசை போலவே சில மாநில அரசுகளும் அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தின. இருப்பினும் சில மாநிலங்களில் இன்னும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
அதில் ஒரு முக்கியமான மாநிலம் மகாராஷ்டிரா. கடந்த அக்டோபர் மாதமே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால், மகாராஷ்டிரா மாநில அரசால் ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட முடியாமல் போனது.
தற்போது கடந்த நவம்பர் 23ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிப்பொறுப்பை கைப்பற்றியது. டிச.5ஆம் தேதி முதலமைச்சர், துணை முதலமைச்சர்களும், டிச.15ஆம் தேதி அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், தங்களுக்கான அகவிலைப்படி உயர்வை (Maharashtra DA Hike) தற்போதே அறிவித்து, ஜனவரியில் கொடுக்கப்படும் டிசம்பர் மாத ஊதியத்தில் அகவிலைப்படி நிலுவைத் தொகையையும் (DA Arrear) சேர்த்தே விடுவிக்க வேண்டும் என்றும் மகாராஷ்டிரா மாநில ஆசிரியர் வாரியம் அம்மாநில அரசுக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளது.
தற்போது முதலமைச்சராக பதவியேற்றுள்ள முதலமைச்சர் தேவேந்திரே ஃபாட்னாவிஸ், துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், துறை சார்ந்த அமைச்சர்கள், செயலாளர்கள் இதுகுறித்து விரைவாக முடிவெடுத்து அகவிலைப்படி உயர்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.