8வது ஊதியக்குழு: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மூலம் 186% ஊதிய உயர்வு, ஊழியர்களுக்கு கொண்டாட்டம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் நாட்களில் பல நல்ல செய்திகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூரியதாரர்களின் ஓய்வூதியம் ஆகியவற்றில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
இன்னும் சில நாட்களில் 8வது ஊதியக்குழு குறித்த ஒரு பெரிய புதுப்பிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முன்னதாக, குறைந்தபட்ச சம்பளத்தில் 186% அதிகரிப்பு சாத்தியம் என பல ஊடக அறிக்கைகள் தெரிவித்துக்கொண்டு இருக்கின்றன. இதற்கான அடிப்படை என்ன என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.
தற்போது, 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. 6வது ஊதியக் குழுவின் கீழ் இது ரூ.7,000 ஆக இருந்த நிலையில், 7வது ஊதியக்குழுவில் இது கணிசமாக அதிகரித்தது. 8வது ஊதியக்குழுவில் இது மேலும் உயரும் என கூறப்படுகின்றது.
கூட்டு ஆலோசனை அமைப்பின் தேசிய கவுன்சில் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா, புதிய சம்பள கமிஷனில் குறைந்தபட்சம் 2.86 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இது சம்பளம் மற்றும் ஓய்வூதிய திருத்தங்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். இதன் பிறகு 186% அதிகரிப்புக்கான பேச்சு தீவிரமடைந்துள்ளது.
சம்பள உயர்வு: அரசாங்கம் 2.86 ஃப்ட்மெண்ட் ஃபாக்டருக்கு ஒப்புதல் அளித்தால், குறைந்தபட்ச சம்பளம் 186% அதிகரித்து ரூ.51,480 ஆக உயரும். இது தற்போதைய ரூ.18,000 லிருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் மத்திய அரசு ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வுக்கு வழிவகுக்கும்.
சம்பளம் மட்டுமல்லாமல் ஓய்வூதியத்திலும் ஏற்றம் ஏற்படும். 8 ஆவது ஊதியக் குழுவின் கீழ், ஓய்வூதியதாரர்களின் (Pensioners) தற்போதைய ஓய்வூதியம் ரூ.9,000 உடன் ஒப்பிடும்போது, 186 சதவீதம் அதிகரித்து ரூ.25,740 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலரால் எதிர்பார்க்கப்படும் 2.86 ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கு அரசு ஒப்புதல் அளித்தால் இந்த கணக்கீடுகள் உண்மையாகும்.
அனைத்து ஊதிய கிரேடுகளிலும் சம்பள உயர்வுகள் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான வழிமுறையாக ஃபிட்மெண்ட் ஃபாக்டர் செயல்படுகிறது. இந்த முறையான சரிசெய்தல், மத்திய அரசு ஊழியர்களின் வாங்கும் திறனைப் பாதுகாக்க உதவுகிறது, மேலும் அவர்கள் உயரும் செலவினங்களுக்கு ஏற்றவாறு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை பராமரிக்கவும் இது உதவியாக இருக்கின்றது.
பிப்ரவரி 2025 -இல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார். அப்போது அவர் 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம் பற்றி அறிவிப்பார் என நம்பபடுகின்றது. பட்ஜெட் இந்த அறிவுப்புக்கான சரியான நேரமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழு அமைக்கப்படுகின்றது. 7வது ஊதியக்குழு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வகையில் 8வது உதியக்குழு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வரவேண்டுமானால், அதற்கான அறிவிப்பு இப்போது வர வேண்டியது மிக அவசியம்.
டிசம்பர் மாதம் கூட்டு ஆலோசனை அமைப்புகளின் தேசிய கவுன்சில் கூட்டம் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு 8வது ஊதியக் குழு அமைப்பது குறித்த தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கூட்டம் நவம்பர் மாதத்திலேயே நடைபெறும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இது டிசம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.