8வது ஊதியக்குழு: 35%-க்கு மேல் ஊதிய உயர்வு..... மத்திய அரசு ஊழியர்களுக்கு நவம்பரில் குட் நியூஸ்

Sat, 02 Nov 2024-12:54 pm,

இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் மாதம் ஒரு முக்கியமான மாதமாக இருக்கவுள்ளது. அவர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பு குறித்த அப்டேட் இந்த மாதம் அவர்களுக்கு கிடைக்கக்கூடும்.

8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்காக நீண்ட காலமாக காத்திருக்கும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த மாதம் ஒரு நல்ல செய்தி கிடைக்கக்கூடும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சம்பள உயர்வு குறித்து விவாதிக்க அரசு மற்றும் ஊழியர் சங்கங்கள் இந்த மாதம் கூடவுள்ளன.

சம்பள உயர்வு கோரிக்கை நீடித்து வரும் நிலையில், இரு தரப்பினரும் இது குறித்து ஒன்றாக அமர்ந்து முடிவெடுப்பது இதுவே முதல் முறை. ஒருமித்த கருத்து எட்டப்பட்டால், அது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க வரப்பிரசாதமாக அமையும்.

இந்த விவாதங்களின் முக்கிய புள்ளியாக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் 8வது ஊதியக் குழுவிற்கான உருவாக்கம் இருக்கும். 8வது ஊதியக் குழு அரசு ஊழியர்களுக்கான சம்பள அமைப்பை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு இதுவரை மவுனம் காத்து வருகிறது. எனினும், ஊழியர்களின் சேவை நிலைமைகள் குறித்து ஆலோசிக்க உருவாக்கப்பட்ட கூட்டு ஆலோசனை அமைப்பான ஜேசிஎம் (JCM), அடுத்த மாதம் 8வது ஊதியக் குழு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதிக்க ஊழியர் சங்கங்களைச் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த சந்திப்பின் மூலம் 8வது ஊதியக்குழு குறித்த தெளிவு ஏற்படும் என அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு தலைவரும், ஜேசிஎம் தேசிய கவுன்சிலின் செயலாளருமான ஷிவ் கோபால் மிஸ்ரா (Shiv Gopal Mishra) நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது ஊழியர் சங்க பிரதிநிதிகள் இந்த பிரச்சனையை எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழியர் சங்கங்கள் இது குறுத்து ஏற்கனவே அரசாங்கத்திடம் குறிப்பாணைகளை சமர்ப்பித்துள்ள நிலையில், அரசு சார்பில் இன்னும் இதற்கு அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என மிஸ்ரா சுட்டிக்காட்டினார்.

7வது ஊதியக் குழு 2014 இல் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் 2016 இல் செயல்படுத்தப்பட்டன. ஊதியக் கமிஷன்களை நடைமுறைப்படுத்துவதற்குக் கட்டாயக் காலக்கெடு எதுவும் இல்லை என்றாலும், புதிய ஊதியக்குழுக்கள் பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகின்றன. இருப்பினும், 7வது ஊதியக் குழு, ஊழியர்களின் சம்பள மறுஆய்வு 10 ஆண்டு சுழற்சியாக இருக்கக்கூடாது என்றும், அவ்வப்போது நடத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

7வது ஊதியக் குழு அமலுக்குப் பிறகு பணிச்சுமை, பொருளாதாரம், சேவைகளுக்கான தேவை ஆகியவை கணிசமாக மாறிவிட்டதாக ஊழியர் சங்கங்கள் அரசுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளன. எனவே, 8வது ஊதியக் குழு இந்தக் காரணிகளைக் கருத்தில் கொண்டு, அதற்குரிய சம்பள உயர்வை நிர்ணயிக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். 7வது ஊதியக்குழுவில் 23% ஊதிய உயர்வு பரிந்துரைக்கபட்டது. 8வது ஊதியக்குழுவில் 30-35% சம்பள உயர்வு இருக்கும் என ஊழியர் சங்கங்கள் எதிர்பார்க்கின்றன.

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை (Basic Salary) கணக்கிட பயன்படுத்தப்படும் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அடுத்த ஊதியக்குழுவின் அரசு மாற்றும் என நம்பப்படுகின்றது. கடந்த 7வது ஊதியக்குழுவிலேயே இதை 3.68 ஆக மாற்ற  வேண்டும் என கோரிக்கை இருந்தது. ஆனால், அரசாங்கம் அதை 2.67 ஆகவே வைத்தது. 8வது ஊதியக்குழுவில் அரசாங்கம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 1.92 ஆக மாற்றும் என கூறப்படுகின்றது.

8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூடும். ஓய்வூதியதாரர்களின் (Pensioners) குறைந்தபட்ச ஓய்வூதியம் (Pension) தற்போதுள்ள ரூ.9,000 -இலிருந்து ரூ.17,280 ஆக உயரக்கூடும்.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link