அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: 8வது ஊதியக் குழுவுக்கு பதில் இனி ஒவ்வொரு ஆண்டும் சம்பள திருத்தமா?
மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக 8வது உதியக்குழுவின் உருவாக்கத்திற்காக காத்திருக்கிறார்கள். எனினும், அது பற்றிய பரிசீலனை தற்போது இல்லை என்பதே அரசின் சமீபத்திய நிலைப்பாடாக இருந்து வருகிறது.
மக்களவையில் நிதி அமைச்சகம் அளித்த பதிலின் மூலம் 8வது ஊதியக் குழு குறித்த அரசின் நிலைப்பாடு தெளிவாகியுள்ளது. எனினும், இதற்கு மாற்றாக ஒரு திட்டத்தை அரசு தீட்டி வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக்குழு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வகையில் 8வது ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வர வேண்டும்.
ஆனால், இம்முறை அரசு ஊதியக் குழுவிற்கு பதிலாக மற்றொரு மாற்று வழியை அறிமுகம் செய்யக்கூடும் என கூறப்படுகின்றது. புதிய ஊதியக் குழுவை அமைப்பதற்குப் பதிலாக, ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் செயல்திறனை ஒரு காரணியாக பயன்படுத்தலாம் என்று சில மூத்த அரசாங்க அதிகாரிகள் கூறுகிறார்கள்.
எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாததால், ஊழியர்கள் தற்போது குழப்பத்தில் உள்ளனர். செயல்திறன் அடிப்படையில் சம்பளம் உயர்த்தப்படும் என்றால், இது தனியார் துறை நிறுவனங்களில் நடப்பது போல ஒவ்வொரு ஆண்டும் நடக்குமா என்ற கேள்வியும் உள்ளது. இந்த வழியை பின்பற்றினால், அரசாங்க அலுவலக செயல்முறைகளில் பல வித மாற்றங்களை செய்ய வேண்டி இருக்கும்.
இதற்கிடையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-26 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்வார். அப்போது 8வது சம்பள கமிஷன் அமைப்பது குறித்து, அரசு அறிவிக்கலாம் என, ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை.
8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால், அடிப்படை ஊதியத்தை கணக்கிட பயன்படும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மாற்றப்படும். புதிய ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகின்றது.
சம்பள உயர்வு: இப்போது, 7வது ஊதியக்குழுவிலிருந்து 8வது ஊதியக்குழுவிற்கு மாறும்போது, குறைந்தபட்ச அடிப்படை ஊதியமான ரூ.18,000, ரூ.51,480 ஆக அதிகரிக்கலாம். ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக மாற்றப்பட்டால், இது சாத்தியமாகும். இதனால், சுமார் 1 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் புத்தாண்டின் தொடக்கத்தில் சிறப்பான செய்திகளைப் பெறுவார்கள்.
ஊழியர்கள் மட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்களுக்கும் இதனால் நல்ல பலன் கிடைக்கும். ஓய்வூதியத்தில் 186% அதிகரிப்பும் சாத்தியமாகும். தற்போது ரூ.9,000 ஆக உள்ள ஓய்வூதியம் ரூ.25,740 ஆக அதிகரிக்கலாம். ஆனால், இதுவரை அரசு தரப்பில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
8வது ஊதியக்குழுவிற்கு பதிலாக வரக்கூடும் புதிய முறையில் இதே அளவு ஏற்றம் இருக்குமா என்ற கவலை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உள்ளது. எனினும், தனியார் துறையில் உள்ளது போல, ஆண்டுக்கு ஒரு முறை செயல்திறனின் அடிப்படையில் சம்பளம் உயர்த்தப்பட்டால், அதுவும் அரசின் நிதிச்சுமையை வெகுவாக கூட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.