விரைவில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரலாம்? நிதி அமைச்சகம் கொடுத்த அப்டேட்
மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள், 8வது சம்பள கமிஷன் அமைக்க வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர். 7வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.
பொதுவாக, மத்திய அரசு ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு புதிய ஊதியக் குழுவை உருவாக்குகிறது. அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் மற்றும் அகவிலைப்படி (DA) திருத்தப்பட்டு, அதற்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப்படும். எனவே நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும் என மத்திய அரசு ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சகம் 8வது சம்பள கமிஷன் பற்றிக் குறிப்பிடலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் நிதி அமைச்சகம் தரப்பில் இருந்து பகிரப்படவில்லை.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் 7வது ஊதியக் குழு 2014 பிப்ரவரி 28 அன்று அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 7வது ஊதியக் குழுவுக்கு நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைமை தாங்கினார். 7வது ஊதியக் குழுவின் நோக்கம் அனைத்து மத்திய ஊழியர்களின் சம்பளத்தை மறுபரிசீலனை செய்வதாகும். தற்போது 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 8வது சம்பள கமிஷன் அமைக்கப்படும் என மத்திய ஊழியர்கள் ஆவலுடன் எதிர் பார்த்துள்ளனர்.
பிப்ரவரி 2014 இல் உருவாக்கப்பட்ட 7வது ஊதியக் குழுவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது ஜனவரி 1, 2016 முதல் அமலுக்கு வந்தது. மேலும் ஊழியர்களுக்கான சம்பள மாற்றம் ஜூலை 1, 2016 முதல் அமல்படுத்தப்பட்டது. இப்போது 8வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அரசாங்கம் ஒரு குழுவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதா என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகின.
8வது ஊதியக்குழு அமைப்பது தொடர்பாக ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. நிதி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தது. 8வது ஊதியக் குழுவை அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கவில்லை என நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.
8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்று பல ஊழியர் அமைப்புகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. பணவீக்கம் அதிகரித்து வருவதால், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்று அவர்கள் கூறிவிருக்கின்றனர். மேலும், 10 ஆண்டுகளுக்குப் பதிலாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளம் மாற்றியமைக்கப்படும் வகையில், சம்பளத் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
புதிய சம்பள கமிஷன் அமைப்பது தற்போது முன்னுரிமை இல்லை என அரசு தெளிவுபடுத்தி உள்ளது. அதேநேரம் அகவிலைப்படி உயர்வு மற்றும் பிற கொடுப்பனவுகள் மூலம் அரசு ஊழியர்கள் தங்கள் தேவையை பூர்த்தி செய்துக்கொள்கிறார்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய அரசாங்கம் இதுவரை புதிய ஆணைக்குழுவை முன்மொழியவில்லை என்றாலும், நிலைமை மாறலாம். ஊழியர் அமைப்புகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இந்திய பொருளாதாரம் மேம்படும் பட்சத்தில், 8வது ஊதியக் குழுவை அமைப்பது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படலாம் எனத் தெரிகிறது.