8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோ
7வது ஊதியக் குழு 9 ஆண்டுகளை நிறைவு செய்து அதன் இறுதிக் கட்டத்திற்குள் நுழைவதால், 8வது ஊதியக் குழுவின் உருவாக்கம் குறித்த பேச்சுகள் முழு வீச்சில் உள்ளன. சுமார் 1.2 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இரண்டு முக்கிய அறிவிப்புகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
8வது ஊதியக் குழுவை அரசாங்கம் எப்போது அறிவிக்கும்? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கவுள்ள ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு? இவற்றுக்கான விடைகளை ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான காலக்கெடுவைப் பொறுத்தவரை, மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை. எனினும், பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக்குழுவின் கால அளவு 2025 ஆம் ஆண்டுடன் நிறைவடைகின்றது. ஆகையால், 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என நம்பப்படுகின்றது.
8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்டு ஃபாக்டர் மாற்றப்படும் என கூறப்படுகின்றது. அடிப்படை ஊதியம் ஃபிட்மெண்டு ஃபாக்டரின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகின்றது. ஆகையால், ஊழியர்களின் ஊதிய அமைப்பில் இது முக்கியமான காரணியாக பார்க்கப்படுகின்றது. மேலும் இதன் அடிப்படையில், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் அதிகரிப்பதற்கான கணிப்புகள் உள்ளன.
மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் ஒவ்வொரு ஊதியக் குழுவிலும் ஃபிட்மென்ட் ஃபாக்டரைப் பயன்படுத்தி திருத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 7வது ஊதியக் குழுவின் கீழ், 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரைப் பயன்படுத்தி ஊழியர்களின் சம்பளம் திருத்தப்பட்டது. ஊழியர் சங்கங்கள் அப்போது 3.67 ஃபிட்மென்ட் ஃபாக்டரை கோரியிருந்தன. ஆனால், அரசு 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரையே இறுதி செய்தது.
8வது ஊதியக் குழுவின் கீழ் குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயம் செய்ய எதிர்பார்க்கப்படும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்ன? தேசிய கூட்டு ஆலோசனை இயந்திரங்களின் (NC-JCM) செயலாளர் (பணியாளர் தரப்பு) ஷிவ் கோபால் மிஸ்ரா, சம்பளம் மற்றும் ஓய்வூதியத் திருத்தத்திற்காக "குறைந்தது 2.86" என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரை எதிர்பார்ப்பதாக NDTV இன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஸ்ரா தொலைக்காட்சி சேனலிடம், "இதுபோன்ற திருத்தம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் 2.86 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரை எதிர்பார்க்கிறேன்" என்று கூறினார்.
ஊதிய உயர்வு: இந்த ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில், அரசு ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் (Basic Salary) ரூ.51,480 ஆக உயரும். தற்போதைய குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆகும்.
ஃபிட்மென்ட் ஃபாக்டரில் மாற்றம் ஏற்பட்டால், ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயம் செய்யப்பட்டால், ஓய்வூதியம் தற்போதுள்ள ரூ.9,000 -லிருந்து ரூ.25,740 ஆக அதிகரிக்கும்.
சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வுகள் முந்தைய குறைந்தபட்ச சம்பளம் அல்லது ஓய்வூதியத் தொகையுடன் ஃபிட்மென்ட் ஃபாக்டரைப் பெருக்கி கணக்கிடப்படுகிறது. ஆகையால் ஃபிட்மென்ட் ஃபாக்டர் மாற்றப்பட்டால் மிகப்பெரிய ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
8வது ஊதியக் குழுவை விரைவில் அமைக்கக் கோரி NC-JCM இரண்டு மெமோராண்டம்களை சமர்ப்பித்தது. ஜூலை 2024 இல் மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்னர், முதல் மெமோராண்டம் அப்போதைய மத்திய அமைச்சரவை செயலாளராக இருந்த ராஜீவ் கௌபாவிடம் வழங்கப்பட்டது. இரண்டாவது குறிப்பாணை ஆகஸ்ட் 30 அன்று கேபினட் செயலாளராக பதவியேற்ற டி.வி.சோமநாதனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.