ஆப்கானிஸ்தான் பவுலிங் மாஸ்டர் மைண்ட் இவர் தான்! ஸ்கெட்ச் போட்டு ஆஸியை வீழ்த்திய முன்னாள் சிஎஸ்கே வீரர்
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கான சூப்பர் 8 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி குரூப் 1-ல் இடம்பிடித்துள்ள ஆப்கானிஸ்தான் அணி வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் மேற்கு இந்தியத் தீவுகளின் கிங்ஸ்டவுனில் இன்று (ஜூன் 23) காலை நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தனர். அதிரடியாக ஆடி வந்த குர்பாஸ் 60 ரன்களிலும், ஸ்த்ரான் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பெரிய ஸ்கோர் குவிக்கும் என்று அந்த அணி எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்து வந்த ரஷித், கரீம் ஜனத், குல்புதீன் நைப் ஆகியோரை ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சொற்ப ரன்களில் வெளியேற்றினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு, முதல் ஓவரை வீசிய நவீன் உல் ஹக், அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட்டை கிளீன் போல்ட் ஆக்கி அதிர்ச்சி கொடுத்தார்.
மூன்றாவது ஓவரில் ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷை 12 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார் நவீன். ஐந்தாவது ஓவரில் வார்னரை 3 ரன்களில் அவுட் ஆக்கினார் நபி. இதனால் ஆஸ்திரேலியா அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வேல் மட்டும் ஒரு பக்கம் நின்று போராட, மறுபக்கம் வந்த வேகத்தில் ஒற்றை இலக்க ரன்னில் மற்ற வீரர்கள் பெவிலியன் நோக்கி திரும்பினர்.
இதனால் ஆஸ்திரேலியா 19.2 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகர் டுவைன் பிராவோ. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான இவர், நடப்பு உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவதற்கு பவுண்டரி லைனில் இருந்து ஐடியா கொடுத்துக் கொண்டே இருந்தார். பிராவோவின் ஐடியா சரியாக வொர்க்அவுட்டாக ஆப்கானிஸ்தான் அணி இந்த வெற்றியை சாத்தியமாக்க முடிந்தது.