ஜாம்நகர் சமஸ்தானத்தின் வாரிசாக அஜய் ஜடேஜா அறிவிப்பு
அஜய் ஜடேஜாவை பலருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக, ஒரு வீரராக தெரியும். அவரது தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி எட்டு போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் தழுவியிருக்கிறது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக விளையாடினார். கடைசியாக 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி போட்டியில் விளையாடினார்.
அந்த தொடரில் ஹரியானா அணியின் கேப்டனாக அந்த அணியை வழிநடத்தினார். அந்த ரஞ்சி கோப்பை தொடர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் கடைசி ரஞ்சி கோப்பையும் கூட.
அதன்பிறகு, கிரிக்கெட் களத்தில் வர்ணனையாளராக செயல்படும் அஜய் ஜடேஜா, ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கு ஆலோசனை வழங்குபவராகவும் செயல்பட்டு வருகிறார்.
அவரைப் பற்றி பலரும் தெரியாத ஒரு விஷயம், அவரது குடும்பம் பாரம்பரிய மிக்க அரசு குடும்பம் ஆகும். இவரது தந்தை தவுலத்சின்ஜி ஜடேஜா குஜராத் கட்ச் பகுதியில் மூன்று முறை தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அது மட்டும்மல்லாமல் ஜடேஜாவின் உறவினர்களான ரஞ்சிசின்ஜி மற்றும் துலீப் சின்ஜி ஆகியோர் கிரிக்கெட் பிளேயர்கள். அவர்களுடைய பெயரில் தான் இப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ரஞ்சி கோப்பை மற்றும் துலீப் டிராபி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பேரும், புகழும் மிக்க பாரம்பரிய அரசவை குடும்பத்தின் வாரிசாக இருக்கும் ஜடேஜா இப்போதைய ஜாம்நகர் அப்போதைய நவாநகர் சமாஸ்தானத்தின் வாரிசாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை இப்போதைய சமாஸ்தான அரசராக இருக்கும் மகாராஜா ஜாம்சாஹேப் தன்னுடைய அறிக்கை மூலம் உறுதிபடுத்தியுள்ளார்.