நோய்களை குணமாக்கும் நடைப்பயிற்சி... இந்த நன்மைகள் உறுதி..!
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு காலை உடற்பயிற்சி அத்தியாவசியமானது. ஏதாவதொரு உடற்பயிற்சியுடன் அன்றைய நாளை தொடங்குவதை வழக்கமாக நீங்கள் வைத்திருந்தால் நிச்சயம் உங்கள் வாழ்க்கை முறையே சிறப்பாக இருக்கும். ஆனால், பலர் காலை உடற்பயிற்சி என்றால் என்ன? எதுக்கு செய்ய வேண்டும்? என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றனர்.
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் என்ற பிரச்சனைகள் வந்தபிறகு தான் நடைப்பயிற்சி போக வேண்டும் என்ற ஞானோதயமே பலருக்கு வருகிறது. அப்படியான பிரச்சனைகள் வருவதற்கு முன்பே நீங்கள் இந்த பயிற்சியை தொடங்குவது தான் நல்லது. ஒரு சில நிமிடங்கள் மேற்கொள்ளும் நடைப்பயிற்சியில் உங்கள் ஆரோக்கியத்தை மாற்றக்கூடிய சக்தி இருக்கிறது. இதை தெரிந்து கொண்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.
நடைப்பயிற்சி செய்ய எந்த உபகரணமும் தேவையில்லை. உங்களின் முனைப்பு மட்டும் இருந்தால் போதும், காலையில் சீக்கிரம் எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு காலணி அணிந்து கொண்டு கிளம்புவது மட்டுமே உங்கள் வேலை. நடைப்பயிற்சிக்காக பைசா செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. முதலீடு எல்லாம் உங்களின் தன் முனைப்பு மட்டும் தான்.
நடக்கும்போது உங்கள் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. எண்டோர்பின்களின் வெளியீடு தூண்டப்படும். இதனால், உங்கள் மனநிலை ஆரோக்கியமாக இருக்கும். அதாவது மனநிலை ஆரோக்கியத்தை இயல்பாக வைத்திருக்கக்கூடிய நல்ல ஹார்மோன்கள் தான் இவை. நடந்தாலே இந்த ஹார்மோன்கள் சுரப்பு அதிகரிக்கும் என்பது தான் ஸ்பெஷல்.
நடைப்பயிற்சி மூட்டுகளின் இயக்கத்தை அதிகரிக்கிறது. இதனால் மூட்டுகளின் வலிமை அதிகரிப்பதுடன் அவற்றை சுற்றியிருக்கும் தசைகளின் வலிமையும் அதிகரிக்கும். எலும்புகளின் வலிமையும் கூடும். நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிபதால் இதயத்தின் இயக்கமும் சிறப்பாக இருக்கும். இது உங்கள் மனதை சாந்தமாக வைத்திருக்க உதவும். இதயம் சிறப்பாக இயங்கும்போது உடலுக்கு செல்லும் ரத்த ஓட்டம் அனைத்து பகுதிகளுக்கும் சென்று, சோர்வில்லாமல் இருப்பீர்கள்.
நடக்கும் போது சுவாசம் சீராக தொடங்கும். ஆழ்ந்த மூச்சு பயிற்சி கிடைக்கும். இதனால் நுரையீரல்களின் இயக்கமும் அதிகரித்து, கெட்ட காற்றை உடலில் இருந்து வெளியேற்றுவது துரிதமாக நடைபெறும். சுவாசம் சீராக சீராக உங்களின் சிந்தனைகள் விரிவடையும். மனதில் தெளிவு பிறக்கும். என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி அதனை முழு மூச்சாக செய்வீர்கள்.
நடைப்பயிற்சிக்கும் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது என பிரிட்டீஷ் ஸ்போர்ட்ஸ் ஜர்னல் ஆப் மெடிசன் இதழ் தெரிவித்திருக்கிறது. தினமும் ஒருவர் காலையில் நடக்கும்போது அவருக்கு நீரிழிவு நோய் ஆபத்து 15 விழுக்காடு வரை குறைவாக இருக்கிறது என அந்த ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது. நடைப்பயிற்சி இன்சுலின் சுரப்பு, கட்டுபாட்டில் நேரடியாக தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்தக்கூடியது.
காலை நடைப்பயிற்சி உங்களை மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் உதவுகிறது. உங்களை நீங்கள் மனதளவில் அமைதியாக வைத்துக் கொள்ள இந்த நடைப்பயிற்சி பெரும் உதவி செய்யும். எண்ணங்கள் ஒழுங்கமைப்பு சரியாக இருக்கும்பட்சத்தில் எந்த சவால்களையும் எதிர்கொள்ளவும், சூழ்நிலைகளை சரியாகவும் கையாளும் ஆற்றல் உங்களிடம் இருக்கும்.
மிக முக்கியமாக கலோரிகளை எரிப்பதிலும், செரிமான கோளாறுகளை சீராக்குவதற்கும் நடைப்பயிற்சி உதவும். பசியின்மை ஹார்மோன்கள் சீராக்குவதிலும் நடைப்பயிற்சி முக்கிய பங்காற்றும். செரிமான கோளாறுகள் தான் நீரிழிவு நோய்க்கு வித்திடுகின்றன என்பதால், அவற்றை சரிசெய்யும் நடைபயிற்சியை தவிர்க்காமல் தினமும் செய்வதே உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான கருவியாகும்.
ஒழங்கற்ற தூக்கம் இருப்பவர்கள் நடைப்பயிற்சி செய்வது அவசியம். தூக்கம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் காலை, மாலை என இருவேளைகளிலும் நடைப்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும். இதுஉங்களின் ஒழுங்கற்ற தூக்க கடிகாரத்தை சீரமைக்க வித்திடும். ஆரோக்கியமான தூக்கமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை. அதனால் ஒருபோதும் தூக்கத்தை புறக்கணிக்கக்கூடாது. தூக்கம் பிரச்சனை இருந்தால் நடைப்பயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சியை புறக்கணிக்கக்கூடாது.