உதயநிதியும், சேகர் பாபுவும் 12ஆம் வகுப்பில் சேரலாம்... அண்ணாமலை அட்வைஸ்க்கு என்ன காரணம்?
சனாதன தர்மத்தை மலேரியா, டெங்கு போன்ற நோய்களை போல தடுக்கக் கூடாது, முற்றிலுமாக ஒழிக்கக் கூடியது என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி, சில நாள்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியிருந்தார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு பாஜக, இந்து அமைப்புகள் போன்ற வலதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரை மன்னிப்பு கேட்கும்படி கூறினர். குறிப்பாக, பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா, உதயநிதி சனாதனத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுக்கொலை செய்ய அழைப்பு விடுப்பதாக கருத்து தெரிவிக்க, இது நாடு முழுவதும் கடும் கண்டங்களை இந்து அமைப்புகளிடேயே எழுப்பியது.
இருப்பினும், தனது கருத்தில் உறுதியாக இருந்த உதயநிதி ஸ்டாலின், கொள்கையை தான் ஒழிப்பேன் என கூறினே தவிர எந்த இடத்திலும் அதை பின்பற்றும் மக்களை ஒழிப்பேன் என கூறவேயில்லை என்று விளக்கம் அளித்தார். அதுமட்டுமின்றி, அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும் கிடைத்தது.
அந்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், தமிழ்நாடு 12ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் சனாதன தர்மம் குறித்த கருத்துகள் இடம்பெற்றப் பகுதி இன்று டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த பாடப் புத்தக்கத்தின் பக்கத்தை பகிர்ந்து அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில்,"உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அனைத்துத் தரப்பில் இருந்தும் கண்டனங்களைப் பெற்ற பிறகு இந்து மதமும் சனாதன தர்மமும் வேறு என்று கூறினர். சனாதன தர்மமும் இந்து மதமும் ஒன்றே என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள 12ஆம் வகுப்பு பாடப்புத்தகம் கூறுகிறது. சனாதன தர்மமே அழிவில்லாத நிலையான தர்மம் என்றும் குறிப்பிடுகிறது" என தெரிவித்துள்ளார்.
அதாவது, 12ஆம் வகுப்புக்கான 'அறிவியலும் இந்திய பண்பாடும்' என்ற பாடப்புத்தகத்தில், பக்கம் 58-இல் 'இந்திய பண்பாடும் சமயங்களும்' என்ற பாடம் உள்ளது. அதில் ஒரு பகுதியில், 'சனாதன தர்மம், வேத சமயம் அல்லது வைதீக சமயம் என்றழைக்கப்படுகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அண்ணாமலை அந்த ட்வீட்டில், பி.கே.சேகர் பாபு & உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் அறிவு வளர இந்த வகுப்பில் சேருமாறு அறிவுறுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.