டிசம்பரில் சுற்றுலா போக டக்கரான 8 இடங்கள்... இப்போவே பிளான் போடுங்க!
கோஹிமா (Kohima): வழக்கமான சுற்றுலா தலங்கை விடுத்து, வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் அமைந்துள்ள இந்த நகரில் ஹார்ன்பில் என்ற கலாச்சார பண்டிகை 10 நாள்களுக்கு கொண்டாடப்படும். டிச. 1 முதல் டிச.10ஆம் தேதி வரை கொண்டாடப்படும் இந்த பண்டிகையில், நாகாலாந்து மக்களின் கலாச்சார நடனம், பாடல்கள், நிகழ்த்துக் கலைகள் கொண்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
கௌசனி (Kausani) : உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள மலை கிராமம். இந்த கிராமத்தில் இருந்து நீங்கள் திரிசூல், நந்தா தேவி மற்றும் பஞ்சுலி ஆகிய இமயமலை சிகரங்களின் 300 கி.மீ., அகலமான பரந்த காட்சியை காணலாம்.
வயநாடு (Wayanad): டெக்கான் பீடபூமியின் தென்முனையில் உள்ள பகுதியாகும். இங்குள்ள சுத்தமான ஏரிகள், அடர்ந்து காடுகள், ஆழ்ந்த பள்ளத்தாக்குகள் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் வகையில் இருக்கும். 2-3 நாள்கள் தங்கி இங்கு சுற்றுலா மேற்கொள்ளலாம்.
ஸ்ரீநகர் (Srinagar): ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் டிசம்பரில் செல்ல வேண்டிய முக்கிய சுற்றுலா தலமாகும். தால் ஏரி கண்கவர் காட்சி, மலைப்பை ஏற்படுத்தும் வானுயர் மலைகள் என இயற்கை காட்சிகள் உங்களின் மனதை லேசாக்கும்.
ஓம்காரேஷ்வர் (Omkareshwar): டிசம்பரில் ஆன்மீக சுற்றுலா செல்ல நினைப்பவர்களுக்கு மத்திய பிரதேசத்தில் உள்ள இந்த ஓம்காரேஷ்வர் நகரம் சிறப்பான அனுபவத்தை தரும். நர்மதா நதிக்கரை ஓரத்தில், வானுயர் மலைகளின் அடிவாரத்தில் இருக்கும் இந்த நகரில் இந்து கோயில்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன.
முருதேஸ்வர் (Murudeshwar): கர்நாடகாவின் கடலோரப் பகுதியில் உள்ள இந்த நகரில்தான் உலகின் இரண்டாவது பெரிய சிவபெருமான் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக தோற்றமளிக்கும் இந்த சிலை, அதன் கடலோர அழகோடு சேர்த்து ரசிக்கலாம். டிசம்பர் மாதத்தில் இங்கு ஸ்கூபா டைவிங் செய்வதும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும். இது டிசம்பர் மாதத்திற்கு ஏற்ற தலமாகும்.
ஊட்டி (Ooty): குடும்பத்துடன் மகிழ்ச்சியாக, பரபரப்பின்றி சுற்றுலா செல்ல வேண்டுமென்றால் ஊட்டி முதல் சாய்ஸ். இங்குள்ள மலைகள், ஏரிகள், அருவிகள், தோட்டங்கள் மனதை ரிலாக்ஸ் ஆக்கும்.
ஹைதராபாத் (Hyderabad): தெலங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் டிசம்பர் மாதம் தட்பவெப்பம் அருமையாக இருக்கும். அந்த காலநிலையோடு இதன் நகர்ப்பகுதியிலும், புறநகர் பகுதியிலும் இருக்கும் ஏராளமான சுற்றுலா தலங்களை மகிழ்ச்சியாக சுற்றிப்பார்க்கலாம்.