அவசரமா கடன் வேணுமா... எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? காசை மிச்சம் பண்ண இதை படிங்க
)
வங்கியில் இருந்து தனிநபர் கடன் (Personal Loan) பெற திட்டமிட்டு வருகிறீர்களா... அப்படி என்றால், நிச்சயம் உங்களுக்கு எந்த வங்கியில் கடன் வாங்கலாம், எந்த வங்கியில் வட்டி குறைவாக கிடைக்கும், எந்தெந்த வங்கியில் வட்டி விகிதம் எந்தளவிற்கு உள்ளது ஆகிய பல கேள்விகளும் இருக்கும்.
)
பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என்றில்லை ஒவ்வொரு வங்கிகளுக்கு இடையேயும் வட்டி விகிதங்களில் வேறுபாடு இருக்கும். வட்டி விகிதம் என்றில்லை சில கட்டண விதிமுறைகளும் கூட வேறுபடும். மேலும், ஒவ்வொருவரின் தகுதிக்கு ஏற்பவும், கேட்கும் தொகை, திருப்பிச் செலுத்தும் காலகட்டம் உள்ளிட்ட பல காரணிகளும் வட்டி விகிதங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
)
வங்கியில் தனிநபர் கடன் வேண்டும் என்றால் நிச்சயம் உங்களது கிரெடிட் ஸ்கோர் வங்கி எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்க வேண்டும். மேலும், உங்களுக்கு நிலுவையில் உள்ள கடன்களின் அளவு, உங்களின் மாத வருமானம் உள்ளிட்ட சில விஷயங்களையும் வங்கிகள் கவனத்தில் கொள்ளும். இதில் ஒவ்வொரு வங்கிக்கும் வெவ்வேறு நடைமுறைகள் இருக்கும். எனவே, முதலில் எந்த வங்கியில் உங்களுக்கு குறைவான வட்டி கிடைக்கிறது என்பதை அறிந்துகொள்வது அவசியம்.
ஏனென்றால், நீங்கள் நீண்ட கால நோக்கில் கடன் வாங்கிறீர்கள் என்றால் நிச்சயம் வட்டி விகிதத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். ஒருவேளை உங்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு கூட ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கியில் வட்டி விகிதம் குறைவாக இருக்கிறது என்றால் அது உங்களுக்கு நல்லதுதான். நீண்ட கால நோக்கில் அது பெரியளவில் பணத்தை சேமிக்க உதவும். அந்த வகையில், முன்னணி வங்கிகள் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறித்து இங்கு காணலாம்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI): இங்கு தனிநபர் கடனுக்கு வட்டி விகிதம் 12.60% முதல் 14.60% வரை பெருநிறுவனங்களின் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு வட்டி விகிதம் மாறுபடும். நீங்கள் அரசு அதிகாரி என்றால் வட்டி விகிதம் 11.60% முதல் 14.10% வரை இருக்கும்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி (PNB): இதுவும் பொதுத்துறை வங்கிதான். இங்கு தனிநபர் கடனுக்கு 12.50% முதல் 14.50% வரை வட்டி விகிதம் இருக்கும்.
ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank): தனியார் வங்கியான இங்கு தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 10.85% முதல் 16.65% வரை இருக்கும். மேலும், இங்கு செயலாக்க கட்டணம் (Processing Fee) கடன் பெறும் தொகையில் இருந்து 2% வரை இருக்கும்.
ஆக்சிஸ் வங்கி (Axis Bank): தனியார் வங்கியான இங்கு தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 10.55% முதல் 21.80% வரை இருக்கும். மேலும், இங்கு செயலாக்க கட்டணம் கடன் பெறும் தொகையில் இருந்து 2% வரை இருக்கும்.
கோடக் மஹேந்திரா வங்கி (Kotak Mahindra Bank): இங்கு தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 10.99% முதல் 16.99% வரை இருக்கும். மேலும், இங்கு செயலாக்க கட்டணம் கடன் பெறும் தொகையில் இருந்து 5% வரை இருக்கும்.
ஹெச்டிஎப்சி வங்கி (HDFC Bank): இங்கு தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 10.85% முதல் 24% வரை இருக்கும். இங்கு ரூ.6,500 வரை செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும்.