அஸ்வின் மகத்தான சாதனை..! டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் பவுலர் என்ற அந்தஸ்து
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய மற்றும் மூன்றாவது சர்வதேச பந்துவீச்சாளர் என்ற சாதனையை இந்திய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஆர் அஷ்வின் படைத்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் முதல் பகுதியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த மைல்கல்லை எட்டினார் அஸ்வின்.
ஐதராபாத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டம் நடைபெறும் வியாழக்கிழமை இன்று சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வரலாறு படைத்தார்.
37 வயதான அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (WTC) 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் ஆனார். அஸ்வின் இந்தியாவுக்காக 30 WTC போட்டிகளில் 148 விக்கெட்டுகளுடன் இப்போட்டியில் களமிறங்கினார்.
அவர் 12வது ஓவரின் ஐந்தாவது பந்தில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட்டை வெளியேற்றி தனது 149வது விக்கெட்டை எடுத்தார். மேலும் 16வது ஓவரை அஸ்வின் மீண்டும் வீச வந்தபோது, அவர் வீசிய முதல் பந்தில் முகமது சிராஜிடம் கேட்ச் கொடுத்து 150வது டபிள்யூடிசி விக்கெட்டாக சேக் க்ராவ்லி வெளியேறினார்.
இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் மற்றும் மூன்றாவது சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் ஆகியோர் இந்தப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளில் இந்திய மைதானங்களில் எப்போதும் ஜொலிக்கும் அஸ்வின் இப்போட்டியில் 10வது ஓவரில் கேப்டன் ரோகித் சர்மாவால் அழைக்கப்பட்டார். அவர் வந்ததுமே விக்கெட் இந்திய அணிக்கு கிடைத்தது.
அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 492 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு இந்தியாவுக்காக 500 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் ஆவதற்கு அவருக்கு இன்னும் எட்டு விக்கெட்டுகள் தேவை.
ஹைதராபாத் டெஸ்டின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 35 பந்துகளில் 29 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோவ் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.