இந்திய அணியில் இந்த 5 வீரர்களுக்கு இனி இடமில்லை - பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு
பிசிசிஐ 2023 -24 ஆம் ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் பெயர்கள் இடம்பெறவில்லை. அவர்கள் மட்டுமல்லாது இன்னும் சில வீரர்களின் பெயர்களும் இடம்பெறவில்லை. அதனால், இந்திய அணிக்கான அவர்களின் சர்வதேச கிரிக்கெட் பயணம் ஏறதாழ முடிந்துவிட்டது என்றே சொல்லலாம். அந்த வீரர்கள் யார்? என்பதை பார்க்கலாம்.
கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சொதப்பியதால் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் புஜாரா. அதன்பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவே இல்லை. இருப்பினும் அண்மையில் ரஞ்சி டிராபியில் அடுத்தடுத்து சதமடித்ததால் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், பிசிசிஐ ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணிக்கான தேர்வில் இனி இடம்பெற மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
புஜாராவைப் போலவே இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டவர் அஜிங்கியா ரஹானே. மோசமான ஆட்டத்தால் இந்திய அணியில் சேர்க்கபடாமல் இருந்த ரஹானேவை ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்தும் நீக்கியிருக்கிறது பிசிசிஐ. இதனால் இவரும் இனி இந்திய அணிக்காக எந்தவொரு சர்வதேச போட்டியில் விளையாட வாய்ப்பிலை. ரஹானே பெயரை பிசிசிஐ பரிசீலிக்காது என்பது தெளிவாகியுள்ளது.
சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும் போது இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டவர் ஷிகர் தவான். அவரது பேட்டிங்கில் எந்த குறையும் இல்லை. இருப்பினும் 20 ஓவர் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படாமல் பிசிசிஐ புறக்கணித்தது. அதற்கான காரணம் என்னவென தெரியவில்லை. இப்போது பிசிசிஐ ஊதிய ஒப்பந்த பட்டியலிலும் அவரது பெயர் இல்லாததால் தவானின் சர்வதேச கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது.
அதிகமான இளம் வேகப்பந்துவீச்சாளர் வருகையால் இந்திய அணியில் தனக்கான இடத்தை இழந்தவர் புவனேஷ்வர் குமார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பிசிசிஐ இவரது பெயரை எந்த போட்டிகளுக்கும் பரிசீலிக்கவில்லை. இந்த ஆண்டும் பிசிசிஐ ஊதி ஒப்பந்த பட்டியலில் இவரது பெயர் இடம்பெறாததால் இனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கு புவனேஷ்வர் குமார் களமிறங்க வாய்ப்பில்லை.
புவனேஷ்வர் குமாரைப் போலவே இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ள மற்றொரு வேகபந்து வீச்சாளர் உமேஷ் யாதவ். கடந்த ஆண்டே பிசிசிஐ ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அவருக்கு இம்முறையும் வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால் இனி அவர் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை. யுஸ்வேந்திர சாஹல் பெயர் இடம்பெறவில்லை என்றாலும், அவருக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.