கொழுப்பு கரைய, எடை குறைய, இந்த காலை உணவுகள் கைகொடுக்கும்: ட்ரை பண்ணி பாருங்க
உடல் பருமன் என்பது பலரை வாட்டி வதைக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இதை சரி செய்ய மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மெற்கொள்கிறார்கள், பல வித கடினமான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால், இவற்றுக்கு மத்தியில் சில அடிப்படை விஷயங்களை மறந்து விடுகிறார்கள்.
நம்முடைய காலை பழக்கங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக காலை உணவுக்கு எடை இழப்பில் முக்கியமான பங்கு உள்ளது. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில காலை உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
காலை வேளையில் பழங்களை சாப்பிடுவது மிக நல்லது. பொதுவாகவே பழங்கள் மற்றும் காய்கள் கலோரி அளவை அதிகரிக்காமல் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றன. ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களில் வைட்டமின்களும் தாதுக்களும் அதிகமாக உள்ளன. காலை உணவில் பழங்களை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு உடல் எடையும் வேகமாக குறையத் தொடங்கும்.
முளைகட்டிய பயறு வகைகளை சாட் செய்து சாப்பிடுவது ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும். வெங்காயம், தக்காளி மற்றும் மசாலாப் பொருட்களுடன் முளைத்த பயறுகளை உட்கொண்டால் உடலுக்கு நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. இதனால் எடையும் அதிகரிக்காது.
முட்டை பலர் அதிகமாக விரும்பி உட்கொள்ளும் காலை உணவாக இருக்கின்றது. முட்டை பலருக்கு பிடித்த ஒரு தேர்வாக இருப்பதோடு இதில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இது தசைகளை உருவாக்க உதவுகிறது. முட்டை நீண்ட நேரத்திற்கு உடலுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. நாள் முழுதும் நமக்கு தேவையான ஆற்றலையும் இது நமக்கு அளிக்கின்றது.
காலை உணவுக்கு ஓட்ஸ் மிகவும் ஆரோக்கியமான ஒரு தேர்வாக பார்க்கப்படுகின்றது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரத்திற்கு உடலுக்கு நிறைவான உணர்வை அளிக்கின்றது. உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல் இது கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றது.
பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற உலர் பழங்களும் சியா விதைகள், ஆளிவிதைகள் போன்ற விதைகளும் எடை குறைக்க உதவுகின்றன. இவற்றில் பல ஆரொக்கியமான கொழுப்புகள் அதிக அளவில் உள்ளன. இவற்றை காலை வேளையில் உட்கொள்வதால் வயிற்றில் நீண்ட நேரம் நிரம்பிய உணர்வு இருக்கும். இவை தேவையற்ற பசியைத் தடுக்கவும், தொப்பை கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றன.
இது சிலரை ஆச்சரியப்படுத்தலாம். ஆனால், காலை உணவாக தயிர் சாப்பிடுவதால் எடை இழப்பு தவிர இன்னும் பல வித நன்மைகள் கிடைக்கின்றன. தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்து எடை இழப்பில் உதவுகின்றன. தினமும் காலையில் ஒரு கப் தயிர் சாப்பிட்டால், உடல் எடை வேகமாக குறைய வாய்ப்புள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.