மிரட்டும் யூரிக் அமிலம், படுத்தும் மூட்டு வலி: சுலபமா சரி செய்ய இந்த இலைகள் போதும்
உடலில் உள்ள பியூரின் எனப்படும் தனிமங்களின் முறிவினால் யூரிக் அமிலம் உருவாகிறது. பியூரின்கள் சில உணவுப் பொருட்களில் காணப்படுகின்றன. இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் ஆகியவை போல, யூரிக் அமில அளவையும் கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும்.
உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால், அது பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது. யூரிக் அமிலத்தின் அதிகரிப்பால் கீல்வாதம், மூட்டு வலி, சிறுநீரக கற்கள் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால், யூரிக் அமில அளவு அதிகமானால் உடனடியாக அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இயற்கையான எளிய வழிகளில் யூரிக் அமில அளவை குறைக்கலாம். அப்படி ஒரு வழியை இங்கே காணலாம்.
யூரிக் அமில அளவை குறைத்து மூட்டு வலிக்கும் நிவாரணம் அளிக்க உதவும் சில இலைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த இலைகளை தினமும் உட்கொள்வதால் இயற்கையான வழியில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தலாம்.
கொத்தமல்லி: கொத்தமல்லியில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. கொத்தமல்லி உடலில் படிந்துள்ள யூரிக் அமில படிகங்களை அகற்ற உதவுகிறது. கொத்தமல்லிக்கு சிறுநீருடன் யூரிக் அமிலத்தை நீக்கும் தன்மை உள்ளது. ஆகையால் யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளவர்கள் தினமும் கொத்தமல்லியை பச்சையாகவும் பிற உணவுகளுடன் சேர்த்தும், உட்கொள்ளலாம். இது மூட்டு வலிக்கும் நிவாரணம் அளிக்கின்றது.
வேப்பிலை: வேப்பிலையில் நச்சு நீக்கும் பண்புகள் அதிகமாக உள்ளன. இதை தினமும் உட்கொள்வதால், உடலில் உள்ள நச்சுகளை எளிதாக நீக்கலாம். இது தவிர, வேப்பிலை உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கின்றது. வேப்பிலையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளும் அதிகமாக உள்ளன. தினமும் வேப்பிலையை உட்கொள்வது யூரிக் அமில அளவை குறைப்பதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
முருங்கை இலை: முருங்கை இலைகள் பல இடங்களில் எளிதாக கிடைக்கும் இலையாகும். இதில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. முருங்கை இலையை மென்று சாப்பிடுவது இரத்தத்தில் உள்ள நச்சுக்களை குறைக்கும். இந்த இலைகளில் ஆண்டிஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இவை யூரிக் அமில அளவை குறைத்து உடலில் ஏற்படும் வீக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றன.
துளசி: துளசி இலைகளை தொடர்ந்து உட்கொள்வதால் உடலில் உள்ள கழிவுப்பொருட்கள் வேகமாக வெளியேறும். இது உடலில் யூரிக் அமிலம் சேர்வதைத் தடுக்கிறது. தினமும் 4 முதல் 5 துளசி இலைகளை மென்று சாப்பிட்டால் இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை எளிதாக கட்டுப்படுத்தலாம்.
இவை தவிர வைட்டமின் சி நிறைந்த புளிப்பு பழங்கள், மீன், நெல்லிக்காய், முழு தானியங்கள் ஆகியவையும் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. இவை மூட்டு வலியையும் குறைக்க உதவுகின்றன.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.