சிஎஸ்கே கழட்டிவிடும் 3 ஸ்டார் வீரர்கள்... கோடிகளை கொடுத்து தூக்க காத்திருக்கும் மற்ற அணிகள்!
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை (IPL 2025 Mega Auction) முன்னிட்டு அணிகள் வீரர்களை தக்கவைக்கும் விதிகள், ஏலம் விதிகள் ஆகியவற்றை எதிர்பார்த்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
செப்டம்பரில் மாதத்தில் இந்த விதிகளையும், ஐபிஎல் 2025 மெகா ஏலம் எப்போது, எங்கு நடைபெறும் என்பதையும் ஐபிஎல் கமிட்டி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு ஒரு அணி நான்கு வீரர்களை தக்கவைக்கலாம் என்றும் அதில் வெளிநாட்டு வீரர்கள், உள்ளூர் வீரர்கள் என வீரர்களுக்கான வரம்பு ஏதும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், ஐபிஎல் மெகா ஏலத்தில் 2 RTM கார்டுகளும் வழங்கப்படும் என தகவல்கள் வருகின்றன.
அதிகாரப்பூர்வ தகவல் இல்லையென்றாலும் அஸ்வின் உள்ளிட்ட சிலரும் இதைதான் கூறுகின்றனர். அந்த வகையில், ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், பதிரானா ஆகியோரை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஏலத்தில் சிவம் தூபே, ரச்சின் ரவீந்திரா ஆகியோருக்கு RTM கார்டுகளை பயன்படுத்தி தக்கவைக்கும்.
இந்நிலையில், இந்த உலகத்தர வீரர்கள் சிலரை சிஎஸ்கே அணியால் (CSK) அடுத்த சீசனுக்கு (IPL 2025) தக்கவைக்க இயலாது. எனவே, இந்த மூன்று வீரர்கள் ஏலத்திற்கு வந்தால் ஐபிஎல் ஏலத்தில் மற்ற அணிகளால் கோடிக்கணக்கில் வாங்க அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் குறித்து இதில் காணலாம்.
மொயின் அலி: இவர் சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் பேட்டிங்கிலும், பார்ட் டைம் சுழற்பந்துவீச்சிலும் பலமாக திகழ்ந்தவர் மொயின் அலி (Moeen Ali). இவரால் சிஎஸ்கேவை தக்கவைக்க இயலாது என்பதால் இவர் ஏலத்திற்கு வர அதிக வாய்ப்புள்ளது. இவரை ஆர்சிபி, டெல்லி உள்ளிட்ட அணிகள் கோடிகளை கொட்டி எடுக்க விரும்பும்.
துஷார் தேஷ்பாண்டே: சிஎஸ்கே அணியின் பவர்பிளே பந்துவீச்சு மற்றும் டெத் ஓவர் பந்துவீச்சு இரண்டிலும் தூணாக திகழ்ந்தவர், துஷார் தேஷ்பாண்டே (Tushar Deshpande). இவர் தற்போது உள்ளூர் தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரை சிஎஸ்கே தக்கவைக்காதபட்சத்தில் மும்பை, கேகேஆர் உள்ளிட்ட அணிகள் நிச்சயம் இவரை கோடிகள் கொடுத்து தூக்க நினைக்கும்.
மிட்செல் சான்ட்னர்: இடது கை சுழற்பந்துவீச்சாளரின் தேவை பல அணிகளுக்கு இருக்கிறது. மும்பை, கேகேஆர், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் நிச்சயம் மிட்செல் சான்ட்னரை (Mitchell Santner) பல கோடிகள் கொடுத்து எடுக்க நினைக்கும். சிஎஸ்கேவில் இருந்து வெளியேறும் வீரர்களில் இவர்தான் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளது.