100 யூனிட் இனி இலவசம் இல்லையா...? அரசு பரபரப்பு விளக்கம்
சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் (100 Unit Free Electricity) குறித்து வெளியான செய்தியானது உண்மை நிலைக்கு மாறானது என தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை என TANGEDCO தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது என விளக்கம் அளித்துள்ளது.
இதேபோல், வீட்டு பயன்பாட்டிற்கென மின் இணைப்பு பெற்று அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என TANGEDCO அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனவே, ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளினால் மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை தடுக்கும் நோக்கில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளது.
இத்தகைய முயற்சியினால் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள்/ வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து வழங்கப்படும் என்பது இதன் வாயிலாக தெளிவுபடுத்தப்படுகிறது.