தோனி வந்தும் எந்த பயனும் இல்லை... சிஎஸ்கே பேட்டர்கள் தடுமாறியதற்கு என்ன காரணம்?
நடப்பு ஐபிஎல் தொடரின் (Indian Premier League) 18ஆவது லீக் போட்டியில் சன்ரைசரஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் ஒரு மாற்றத்தையும், சிஎஸ்கே மூன்று மாற்றங்களையும் செய்தன.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கு இந்த முறை சுமாரான தொடக்கமே கிடைத்தது. நான்காவது ஓவரிலேயே ரச்சின் ரவீந்திரா ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தார். இருப்பினும், ரஹானேவின் அதிரடியால் 6 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து சிஎஸ்கே 48 ரன்களை அடித்திருந்தது.
மீண்டும் இடதுகை சுழற்பந்துவீச்சாளரிடம் ருதுராஜ் ஆட்டமிழந்தார். 8ஆவது ஓவரில் ஷாபாஸ் அகமது வீசிய முதல் பந்தில் 26 ரன்களுடன் ருதுராஜ் நடையைகட்டினார். இருப்பினும், அந்த ஓவரில் இருந்தே சிவம் தூபே (Shivam Dube) தனது அதிரடியை தொடங்கினார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு மிரட்டினார். மயங்க் மார்க்கண்டே வீசிய 9ஆவது ஓவரிலும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு தூபே அசத்தினார். நடராஜன் வீசிய 12ஆவது ஓவரில் தூபே 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு ஸ்கோரை சற்று உயர்த்தினார்.
தூபே அதிரடியாக விளையாடியிருந்தாலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே பந்துவீசினர். 9ஆவது ஓவருக்கு பின் சுழற்பந்துவீச்சை அவர்கள் கொண்டு வரவே இல்லை. ஜெயதேவ் உனத்கட், பாட் கம்மின்ஸ், நடராஜன், புவனேஷ்வர் குமார் ஆகியோர் மீதம் இருந்த 11 ஓவர்களையும் வீசினர். அவர்கள் தொடர்ந்து மெதுவான வேகத்திலேயே பந்துவீசி ஆடுகளத்தின் தன்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.
ஆடுகளமும் மெதுவாக செயல்பட பேட்டர்களுக்கு பந்து சரியாகப்படவே இல்லை. 13ஆவது ஓவருக்கு பின் டைம்அவுட் எடுக்கப்பட்டது. அப்போது சிஎஸ்கே 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 115 ரன்களை எடுத்திருந்தது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சிஎஸ்கே எடுத்தது. அதாவது கடைசி 7 ஓவர்களில் 50 ரன்கள் மட்டுமே ஹைதராபாத் பந்துவீச்சாளர்களால் கொடுக்கப்பட்டது.
கடைசி ஓவரில் நடராஜன் (Natarajan) 7 ரன்களை கொடுத்தார். குறிப்பாக, டேரில் மிட்செலின் விக்கெட்டை மூன்றாவது பந்திலேயே நடராஜன் கைப்பற்றினார். தொடர்ந்து, 7ஆவது வீரராக தோனி (MS Dhoni) களமிறங்கினார். இருப்பினும் 4ஆவது பந்து டாட் ஆக, 5ஆவது பந்தில் சிங்கிள்தான் கிடைத்தது. தோனி 2 பந்துகளில் 1 ரன்னையே எடுத்தார்.
சிஎஸ்கே தரப்பில் அதிகபட்சமாக தூபே 45 ரன்களையும், ரஹானே 35 ரன்களையும் சேர்த்தனர். ஹைதராபாத் பந்துவீச்சில் ஷாபாஸ் அகமது, ஜெயதேவ் உனத்கட், நடராஜன், புவனேஷ்வர் குமார், கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.