PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: காப்பீட்டு நன்மைகள்... அமைச்சர் அளித்த அட்டகாசமான தகவல்
PF உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது. இது பிஎஃப் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் காப்பீடு பற்றிய ஒரு முக்கியமான அப்டேட் ஆகும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Employees Deposit Linked Insurance scheme: மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை ஊழியர் வைப்பு இணைக்கப்பட்ட காப்பீடு (EDLI) திட்டத்தின் கீழ், ஊழியர்களின் ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO இன் அனைத்து உறுப்பினர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு நன்மைகளை நீட்டிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மூலம் வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் இந்த அறிவிப்பானது ஆறு கோடிக்கும் அதிகமான இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) ரூ.7 லட்சம் வரையிலான ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பை உறுதி செய்யும். இது பிஎஃப் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மாண்டவியா, இந்தத் திட்டம் முந்தைய தேதியான ஏப்ரல் 28, 2024 -இலிருந்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 1976 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட EDLI திட்டம், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) உறுப்பினர்களுக்கு காப்பீட்டு நன்மைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இபிஎஃப் சந்தாதாரர் (EPF Subscribers) துரதிஷ்டவசமாக இறந்தால், இந்த திட்டம், அந்த உறுப்பினரின் குடும்பத்திற்கும் சில நிதி உதவிகளை உறுதி செய்கிறது.
ஏப்ரல் 2021 வரை, EDLI திட்டத்தில் வரையறுக்கப்பட்ட அளவுகோல்களின்படி, இறந்த ஊழியரின் சட்டப்பூர்வ வாரிசுக்கான அதிகபட்ச பலன் ரூ.6 லட்சமாக வரையறுக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், அரசாங்கம் ஏப்ரல் 28, 2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச பலன்களை முறையே ரூ.2.5 லட்சம் மற்றும் ரூ.7 லட்சமாக உயர்த்தியது.
இது தவிர, ஒரு நிறுவனத்தில் 12 மாதங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையும் தளர்த்தப்பட்ட. அந்த காலகட்டத்தில் தங்கள் வேலையை மாற்றும் ஊழியர்களையும் இந்த வரம்பின் கீழ் கொண்டு வர இந்த தளர்வு அளிக்கப்பட்டது. இந்த நன்மைகள் மூன்று ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என கூறப்பட்டது. அந்த கால வரம்பு ஏப்ரல் 27, 2024 உடன் முடிவடைந்தது. தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இ-ஷ்ரம் போர்ட்டல் பற்றி பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பல்வேறு நலத் திட்டங்களுக்கான தகுதி அளவுகோல்கள் போன்ற புதிய அம்சங்களுடன் இ-ஷ்ரம் போர்ட்டலின் இரண்டாவது பதிப்பு அடுத்த வாரம் திங்கட்கிழமை தொடங்கப்படும் என தெரிவித்தார். இதில் இன்னும் மேம்பட்ட பல அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இ-ஷ்ரம் போர்ட்டல், வேலைத் தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை போர்ட்டலில் பதிவு செய்ய அனுமதிக்கும் என்றும் அவர் கூறினார். அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களின் தேசிய தரவுத்தளத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.
பணி ஓய்வுக்கு பிறகான மிகப்பெரிய நிதி பாதுகாப்பாக கருதப்படும் இபிஎஃப் திட்டதின் கீழ், ஊழியர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்திலிருந்து 12% தொகையை இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. இபிஎஃப் சந்தாதாரர்கள் பங்களிக்கும் தொகை முழுவதும் EPF கணக்கிற்கு செல்கிறது. ஆனால், நிறுவனம் செபாசிட் செய்யும் தொகையில் 3.67 சதவீதம் EPF கணக்கிற்குச் செல்கிறது. மீதமுள்ள, 8.33 சதவீதம், ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) செல்கிறது.
இபிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscriber) வசதிகளை மேம்படுத்த இபிஎஃப்ஓ அவ்வப்போது பல புதிய விதிகளை அறிமுகம் செய்கிறது. ஏற்கனவே உள்ள விதிகளில் மாற்றங்களையும் செய்கிறது. இபிஎஃப் உறுப்பினர்கள் இவற்றை பற்றிய புதுப்பிப்புடன் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) EPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை பணி ஓய்வுக்குப் பிறகு எடுக்கலாம். எனினும், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், பகுதியளவு தொகையையோ அல்லது முழு தொகையையும் எடுக்க EPFO அனுமதிக்கிறது.