ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்... 47 ஆயிரம் பணியிடங்கள் நிரந்தரம் - தமிழ்நாடு அரசு அதிரடி

Tue, 28 Jan 2025-10:30 am,

பள்ளிக்கல்வித்துறையில் 10‌ ஆண்டுகளாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், அமைச்சுப் பணியாளர்கள் பணியிடங்கள் என 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு மேலாக தற்காலிக தொடர் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று வரும் தற்காலிக பணியிடங்கள் தொடர்வதன் அவசியத்தை ஆராய பள்ளிக்கல்வி துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் கூட்டம் கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம்  தேதி அன்று கூடியது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி அராசணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத  47,013 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று பிறப்பித்த அரசாணையில்,"பள்ளிக்கல்வி தற்காலிக பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று வரும் தற்காலிக பணியிடங்கள் தொடர்வதன் அவசியத்தை ஆராய குழு அமைக்கபபட்டது. பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 47013 பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றம்" என குறிப்பிட்டுள்ளது.

மேலும், அந்த அரசாணையில்,"5418 பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும் போது நாளடைவில் ஒழிவடையும் பணியிடங்களாகவும் (Vanishing Post), 145 பணியிடங்கள் வரும் 2028ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அவ்வப்போது அரசால் நிரப்பப்பட்டு வருகிறது. இதேபோல், கடந்தாண்டு ஜூலை மாதமும் 5,146 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

2011-12 நிதியாண்டில் இருந்து தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்த 1,581 பட்டதாரி ஆசிரியர்கள், 3 ஆயிரத்து 549 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கடந்த ஜூலை 21ஆம் தேதி அன்று நிரந்தர பணியிடங்களாக மாற்றியமைக்க அரசாணை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link