தோனிக்கும் இந்த 3 வீரர்களுக்கும் அடித்தது ஜாக்பாட்... ஐபிஎல் அணிகளும் குஷி
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு விதிகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ஒரு அணி மொத்தம் 6 அணிகளை தக்கவைத்துக்கொள்ளலாம். ஒரு RTM ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 5 Capped வீரர்களையும், 2 Uncapped வீரர்களையும் எடுத்துக்கொள்ளலாம்.
முதல் ஸ்லாட்டில் ஒரு வீரரை ரூ.18 கோடிக்கும், இரண்டாவது ஸ்லாட்டில் ஒரு வீரரை ரூ. 14 கோடிக்கும், மூன்றாவது ஸ்லாட்டில் ஒரு வீரரை ரூ. 11 கோடிக்கும் அணிகள் தக்கவைக்கலாம். மேலும், நான்காவது ஸ்லாட்டில் ஒரு வீரரை ரூ.18 கோடிக்கும், ஐந்தாவது ஸ்லாட்டில் ஒரு வீரரை ரூ.14 கோடிக்கும் அணிகள் தக்கவைக்கலாம். கடைசி ஸ்லாட்டில் ஒரு Uncapped வீரரை ரூ. 4 கோடிக்கு அணிகள் தக்கவைக்கலாம்.
அதாவது, சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் Capped வீரர், சர்வதேச போட்டிகளில் விளையாடாதவர் Uncapped வீரர் என்பார்கள். தற்போது புதிய விதியின்படி (Uncapped Player Rule), கடைசி 5 ஆண்டுகளாக சர்வதேச அரங்கில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறாத வீரர்களும் Uncapped வீரர்களாக எடுத்துக்கொள்ளப்படுவார்கள். இந்த விதி முன்பே இருந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன் நீக்கப்பட்டது. இது தற்போது மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
தோனி (MS Dhoni) இந்த 2025 சீசனில் விளையாடுவாரா மாட்டாரா என்ற சந்தேகங்கள் இருந்த நிலையில், இந்த விதியின் அறிவிப்பால் அவர் நிச்சயம் விளையாடுவார் என அனைவரும் நம்புகின்றனர். தற்போது இந்த விதியின் மூலம் சிஎஸ்கே வெறும் ரூ.4 கோடிக்கு தோனியை தக்கவைக்கலாம். பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில் இந்த விதி 7ஆவதாக குறிப்பிடப்பட்டிருந்ததும் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது.
இந்த விதி தோனிக்காகவே கொண்டுவரப்பட்டது போல் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்தாலும், இந்த விதியால் பல அணிகளுக்கும் நல்லது ஏற்பட்டுள்ளது. அதாவது, சிஎஸ்கே மட்டுமின்றி மும்பை உள்பட பல அணிகள் இந்த விதியின் கீழ் சில முக்கிய வீரர்களை வெறும் ரூ. 4 கோடிக்கு தக்கவைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த 3 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
மோகித் சர்மா: குஜராத் டைட்டன்ஸ் அணி இவரை நிச்சயம் தக்கவைக்க முனைப்பு காட்டும். மோகித் சர்மா (Mohit Sharma) கடைசியாக 2015இல் தான் சர்வதேச போட்டியில் விளையாடி உள்ளார். டெத் பௌலிங்கில் மோகித் நன்கு கைகொடுப்பார் என்பதால் இவரை தக்கவைப்பது குஜராத் அணிக்கு கைகொடுக்கும். இல்லையெனில், விஜய் சங்கரை கூட குஜராத் அணி தக்கவைக்கலாம். அவரும் கடைசியாக 2019இல்தான் சர்வதேச போட்டியில் விளையாடினார்.
சந்தீப் சர்மா: இவரும் கடைசியாக 2015ஆம் ஆண்டில்தான் இந்தியாவுக்காக சர்வதேச போட்டியில் விளையாடினார். சந்தீப் சர்மாவை (Sandeep Sharma) ராஜஸ்தான் அணி நிச்சயம் ரூ. 4 கோடி ஸ்லாட்டில் தக்கவைக்கும். இவரது டெத் பௌலிங் அந்த அணிக்கு பல வெற்றிகளை வாங்கித் தந்துள்ளது.
பியூஷ் சாவ்லா: இவர் கடைசியாக 2012ஆம் ஆண்டில்தான் இந்திய அணிக்காக விளையாடினார். கடந்த சீசனில் மும்பை அணியின் முன்னணி விக்கெட் டேக்கிங் பௌலராக பியூஷ் சாவ்லா (Piyush Chawla) இருந்தார். 35 வயதான பியூஷ் சாவ்லா நிச்சயம் ஐபிஎல் போட்டியில் தொடர் விளையாடுவார் என அவரே கூறியிருக்கும் நிலையில், அவரது அனுபவத்திற்காக நிச்சயம் மும்பை அணி தக்கவைக்கும். இந்த மூன்று பேரை மட்டுமின்றி ஷஷாங்க் சிங் (Shashank Singh), மயங்க் மார்க்கண்டே (Mayank Markande) உள்ளிட்ட சில வீரர்களையும் பஞ்சாப், சன்ரைசர்ஸ் அணிகள் தக்கவைக்க வாய்ப்புள்ளது.