ஓய்வூதியதாரர்களுக்கு மெகா ஓய்வூதிய உயர்வு: குட் நியூஸ் கொடுத்த மத்திய அரசு, புதிய வழிகாட்டுதல்கள்
மாத ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். ஓய்வுதியதாரர்களுக்கு நன்மை பயக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கூடுதல் கருணை தொகையுடன் கூடிய ஓய்வூதியத்தைப் பெற முடியும் என்று அறிவித்துள்ளது. புதிய வழிகாட்டுதல்கள், ஓய்வூதியதாரர் 80 வயதை எட்டிய மாதத்திலிருந்து CCS (ஓய்வூதியம்) விதிகள் 2021 இன் கீழ் இந்த நன்மைகள் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.
மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வாக கருணை உதவித்தொகை எவ்வளவு கிடைக்கும்? இது அவர்களின் வயதிற்கு ஏற்ப தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வயதின் அடிப்படையில் சூப்பர் சீனியர் சிடிசன்களுக்கு ஓய்வூதிய உயர்வு, கருணை உதவித்தொகை எவ்வளவு கிடைக்கும் என்பது பற்றி இங்கே காணலாம்.
80 முதல் 85 வயதுடைய மூத்த குடிமக்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 20% உயர்வை பெறுவார்கள். 85 முதல் 90 வயது வரையிலான ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 30 சதவீத உயர்வு கிடைக்கும்.
90 முதல் 95 வயதுக்குட்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 40% உயர்வு இருக்கும். 95 முதல் 100 வயது வரையிலான மூத்த குடிமக்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 50 சதவீத அதிகரிப்பு இருக்கும்.
100 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 100 சதவீத உயர்வைப் பெறுவார்கள். இது அதிகபட்ச அதிகரிப்பாக பார்க்கப்படுகின்றது.
கருணைக் கொடுப்பனவு எப்போது நடைமுறைக்கு வரும்? இந்த கூடுதல் ஓய்வூதியம், ஓய்வூதியதாரர் இந்த விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வயதுக்கு தகுதி பெறும் மாதத்தின் முதல் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும். அதாவது, ஓய்வூதியம் பெறுவோர் மேம்படுத்தப்பட்ட கொடுப்பனவைப் பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் விளக்கப்படுவதை உறுதிசெய்ய ஓய்வூதிய விநியோகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் துறைகள் மற்றும் அனைத்து வங்கிகளையும் அரசாங்கம் ஊக்குவித்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் (Pensioners) எந்தப் பிரச்சனையும் இல்லாமல் உரிய பலன்களைப் பெறுவதை உறுதிசெய்யும் நோக்கில் செயல்பட அரசாங்கம் முற்பட்டுள்ளது.
கருணைக் கொடுப்பனவு கொடுக்கப்படுவதன் நோக்கம், வயதாகும் போது அதிகரிக்கும் மூத்த குடிமக்களின் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க அவர்களுக்கு உதவுவதாகும். இந்த திட்டத்தின் குறிக்கோள், மூத்த குடிமக்களுக்கு வயதாகும்போது அவர்களுக்கு மரியாதைக்குரிய வாழ்க்கைத் தரத்தை வழங்குவதாகும். இதன் மூலம், மூத்த குடிமக்கள், வயதான காலத்தில் நிலையான மற்றும் மேம்பட்ட வருமான ஆதாரம் இருப்பதை உறுதி செய்து, அவர்கள் மீதான அக்கறையை அரசு மீண்டும் நிரூபித்துள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்த செய்தி தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ தளங்களை பார்வையிட பரிந்துரைக்கப்படுகின்றது.