ஐபிஎல் மெகா ஏலம்: ஆர்சிபி குறிவைக்கும் இந்த 3 இந்திய வீரர்கள் - பிரச்னைகளை தீர்க்க பெரிய பிளான்!
ஐபிஎல் தொடரில் மிகவும் பிரபலமான மற்றும் அதிக ரசிகர்கள் கொண்ட அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்றாகும். அந்த பிளே பலமுறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியும், இறுதிப்போட்டி வரை வந்தும் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் தொடரை வென்றதில்லை.
ஐபிஎல் மட்டுமின்றி சாம்பியன்ஸ் லீக்கில் கூட ஆர்சிபி இதுவரை வென்றதில்லை. அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி உள்ளிட்டோர் கேப்டனாக செயல்பட்டும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஏ பி டிவில்லியர்ஸ், ஸ்டார்க் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்களை வைத்திருந்த போதும் அந்த அணி சிறப்பாக விளையாடவில்லை.
துரதிருஷ்டவசமான அணியாக ஐபிஎல் தொடரில் ஆர்சிபி (RCB) பார்க்கப்பட்டாலும் அந்த அணியின் மீதான ரசிகர்களின் நம்பிக்கை மட்டும் ஒரு துளியளவுக்கு கூட குறையாமல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த அணிக்கு இத்தகைய ரசிகர்கள் இருப்பதற்கு விராட் கோலிதான் முக்கிய காரணம்.
அதிலும், கடந்த சீசனின் முதல் கட்ட போட்டிகளில் தொடர் தோல்விகளால் கடைசி இடத்தில் இருந்து தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது. இருப்பினும், பந்துவீச்சிலும் மிடில் ஆர்டரிலும் இருக்கும் பிரச்னை நீக்குவதே ஆர்சிபியின் அடுத்த இலக்காக இருக்கும்.
அந்த வகையில், மெகா ஏலத்தில் (IPL 2025 Mega Auction) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (Royal Challengers Bangalore) இந்த மூன்று வீரர்களை எடுக்கவே அதிக ஆர்வம் காட்டும். அந்த மூன்று பேர் குறித்து இதில் காணலாம்.
யுஸ்வேந்திர சஹால்: ஆர்சிபி அணி செய்த பெரிய தவறுகளில் ஒன்று சஹாலை அணியில் இருந்து கடந்த மெகா ஏலத்தின் போது விடுவித்ததுதான். அந்த தவறுக்கு பிராயசித்தம் தேடிக்கொள்ளும் வகையில் சஹாலை நல்ல தொகைக்கு ஆர்சிபி ஏலத்தில் எடுக்க நினைக்கும். ஆர்சிபி அணிக்கு உலகத்தரத்தில் ஒரு லெக் ஸ்பின்னர் தேவைப்படுகிறது. இவரை ராஜஸ்தான் அணி தக்கவைக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது என்றாலும் இவர் ஏலத்திற்கு வந்தால் ஆர்சிபி எளிதில் விடாது.
கேஎல் ராகுல்: ஆர்சிபியின் வளர்ப்பு பிள்ளையான கேஎல் ராகுல் இம்முறை மெகா ஏலத்திற்கு வருவார் என கூறப்படுகிறது. லக்னோ அணி அவரை விடுவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், ஒன்று அவர் ஏலத்திற் வர வேண்டும் அல்லது டிரேட் செய்யப்பட வேண்டும். ஏலத்திற்கு வரும்பட்சத்திலும் சரி, டிரேட்டிலும் சரி ஆர்சிபி முனைப்பு காட்டும். கேஎல் ராகுல் டி20இல் ஓப்பனிங்கில் இறங்கினாலும் அவரை ஒன்-டவுனில் இறக்க ஆர்சிபி திட்டமிடலாம். விக்கெட் கீப்பர் தேவையும் ஆர்சிபிக்கு இருக்கிறது.
இஷான் கிஷன்: விக்கெட் கீப்பர் என்று பேசும்போது ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய விக்கெட் கீப்பர்களில் இவர் நிச்சயம் அதிக தொகைக்கு ஏலம் போவார் எனலாம். மும்பை அணி இஷான் கிஷனை தக்கவைக்கும் வாய்ப்பும் குறைவுதான். ஆர்சிபி அணிக்கு இடதுகை விக்கெட் கீப்பிங் பேட்டர் கிடைத்தால் அவர்களின் பேட்டிங்கும் பலமாகும்.