உங்கள் கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்வது எப்படி? இதற்கான RBI விதிகள் என்ன?
ஒரு நபரிடம் பல கார்டுகள் இருப்பது இந்த காலத்தில் பொதுவான விஷயம். ஆனால், தேவையை விட அதிகமாக கார்டுகளை வைத்திருப்பது உங்கள் செலவுகளை அதிகரிக்கக்கூடும். ஆகையால் தேவையான கார்டுகளை மட்டும் ஆக்டிவ்வாக வைத்துக்கொண்டு மீதியுள்ளவற்றை க்ளோஸ் செய்வது நல்லது.
நீங்கள் மூட விரும்பும் கார்டில் வருடாந்திர கட்டணம் இல்லை என்றால் (Credit Card Annual Fees) அதை மூடாவிட்டாலும் பிரச்சனை இல்லை. ஆனால், இந்த கட்டணம் இருந்து, நீங்கள் அந்த கார்டை பயன்ப்படுத்தவும் இல்லை என்றால், அதை மூடுவது பற்றி சிந்திக்கலாம். ஏனென்றால், நீங்கள் அந்த அட்டையைப் பயன்படுத்தாததால், கிரெடிட் கார்டு வெகுமதி புள்ளிகளின் (Credit Card Reward Points) பலனும் கிடைக்காது. அதுமட்டுமின்றி கார்டுக்கான கட்டணத்தையும் கட்ட வேண்டி இருக்கும். கிரெடிட் கார்டை எவ்வாறு மூடுவது? இது தொடர்பான ஆர்பிஐ (RBI) விதிகள் என்ன?
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, ஒரு வாடிக்கையாளர் கிரெடிட் கார்டை மூடுவதற்கான கோரிக்கையை சமர்ப்பித்தால், அது 7 நாட்களுக்குள் செயல்படுத்தப்பட வேண்டும். கார்ட் வழங்கும் வங்கி அல்லது நிறுவனம் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், 7 நாட்களுக்குப் பிறகு, ஒரு நாளைக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதை அவர்கள் வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டும். இருப்பினும், கிரெடிட் கார்டில் எந்த நிலுவைத் தொகையும் இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
பலர் சில சமயங்களில் பல கிரெடிட் கார்டுகள் இருப்பதால், சிலவற்றை க்ளோஸ் செய்துவிட நினைப்பார்கள். கிரெடிட் கார்டை மூடுவது, அதாவது க்ளோஸ் செய்வது மிகவும் கடினமான பணி அல்ல, அதை எளிதாக செய்து விடலாம். கார்டை க்ளோஸ் செய்யும் முன் மனதில் கொள்ள வேண்டிய 5 முக்கியமான விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எந்தவொரு கிரெடிட் கார்டை மூடுவதற்கு முன்னரும், அதில் உள்ள நிலுவைத் தொகையை நீங்கள் செலுத்தி விட வேண்டும். உங்கள் நிலுவைத் தொகை மிக சிறிய தொகையாக இருந்தாலும், அதை திருப்பிச் செலுத்தும் வரை உங்கள் கிரெடிட் கார்டு மூடப்படாது.
பலர், தங்கள் கிரெடிட் கார்டுகளை க்ளோஸ் செய்யும் அவசரத்தில், தங்களின் ரிவார்டு பாயிண்டுகளை ரெடீம் செய்ய மறந்து விடுகிறார்கள். அந்த கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நீங்கள் செலவழித்த அனைத்துப் பணத்திற்கும் ரிவார்டு புள்ளிகளைப் பெற்றிருப்பீர்கள். ஆகையால் கார்டை க்ளோஸ் செய்யும் முன் ரிவார்ட் பாயிண்டுகளை ரெடீம் செய்ய மறக்காதீர்கள்.
பல சமயங்களில் பல வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளில் சில தொடர்ச்சியான கட்டணங்களுக்கான ஸ்டாண்டர்ட் டிடக்ஷனை செட் செய்து வைத்திருப்பார்கள். காப்பீட்டு பிரீமியம், OTT மாதாந்திர கட்டணம் போன்றவை இதற்கு உதாரணங்கள். கார்டை க்ளோஸ் செய்வதற்கு முன், அதில் அத்தகைய கட்டணங்கள் செயலில் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இல்லையெனில் கார்ட் க்ளோஸ் செய்யப்பட்ட பின்னர் உங்கள் கட்டணம் செலுத்தப்படாமல் போகலாம். பிரீமியம் நிறுத்தப்பட்டால், உங்கள் பாலிசியில் சிக்கல்கள் ஏற்பாக்கூடும்.
அடுத்த கட்டமாக உங்கள் கிரெடிட் கார்டு வங்கியை நீங்கள் அழைக்க வேண்டும். உங்கள் கார்டை க்லோஸ் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை அவர்களிடம் சொல்ல வேண்டும். கிரெடிட் கார்டை மூடுவதற்கான காரணத்தை வங்கி உங்களிடம் கேட்கக்கூடும். அதற்கு தகுந்த பதிலை நீங்கள் அளிக்க வேண்டும். இதன் பின்னர், தேவையான தகவல்களை உங்களிடம் பெற்ற பிறகு, உங்கள் கிரெடிட் கார்டை மூடுவதற்கான கோரிக்கை எடுத்துக்கொள்ளப்படும். வங்கி உங்களிடம் மின்னஞ்சல் அனுப்பச் சொல்லலாம். அல்லது கார்டை வெட்டி அதன் புகைப்படத்தையும் மின்னஞ்சலில் அனுப்பும்படியும் வங்கி கேட்கலாம்.
உங்கள் கிரெடிட் கார்டை மூடுவதற்கு, அதை குறுக்காக வெட்டிவிடுவது மிக முக்கியமாகும். அது தவறான நபர்களின் கையில் பட்டால், அதன் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. உங்கள் பெயரில் கார்ட் இருப்பதால், உங்கள் பெயரில் சில மோசடிகளும் செய்யப்படலாம். ஆகையால், க்ளோஸ் செய்த கார்டை அப்படியே குப்பைத் தொட்டியில் போடாமல், முதலில் வெட்டி பின் எறிந்துவிடுங்கள்.