தோல்வியே இல்லாமல் உலகக் கோப்பையை தூக்கிய 2 அணிகள்... இந்தியாவும் லிஸ்டில் சேருமா?
1975ஆம் ஆண்டு முதல் ஆடவர் உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதுவரை 12 தொடர்கள் நிறைவு பெற்றுள்ளது. தற்போது இந்தியாவில் 13ஆவது ஆடவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா இதுவரை 5 முறையும், இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் தலா 2 முறையும், பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் தலா 1 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.
இதில், 1975, 1979, 2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே கோப்பையை வென்ற அணி தொடரில் ஒரு தோல்வியை கூட அடையாமல் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.
1975ஆம் ஆண்டுதான் ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடங்கியது. அதில் கோப்பையை வென்ற கிளைவ் லாய்டு தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான், இரண்டு முறை ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி கோப்பையை வென்றது.
1979ஆம் ஆண்டிலும் மேற்கிந்திய தீவுகளின் ஆதிக்கம் தொடர்ந்தது. அதிலும் தோல்வியடையாமல் அந்த அணி கோப்பையை வென்றது. இலங்கைக்கு எதிரான போட்டி மழை காரணமாக ஒரு பந்துக் கூட வீசப்படாமல் ரத்தானது.
2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா நடப்பு சாம்பியனாக அந்த தொடரை எதிர்கொண்டது. ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அந்த தொடரில் தொடர்ந்து 11 போட்டிகளில் வென்று கோப்பையை கைப்பற்றியது. இந்தியாவை லீக்கிலும், இறுதிப்போட்டியிலும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
2007ஆம் ஆண்டும் பலமுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பயணத்தை இதிலும் தொடர்ந்தது. இதிலும் 11 போட்டிகளை வென்று கோப்பையை முத்தமிட்டது. இந்த இரண்டு தொடரிலும் ரிக்கி பாண்டிங் கேப்டனாக செயல்பட்டார். தற்போது இந்திய அணி தான் விளையாடிய 8 லீக் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.