WTC Ranking: ஒரே வெற்றியில் உச்சத்தில் இந்தியா... அதளபாதாளத்தில் இங்கிலாந்து
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் கடந்த பிப். 2ஆம் தேதி தொடங்கியது. நான்காம் நாளான இன்றே போட்டி நிறைவடைந்தது.
இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்திருந்த நிலையில், 292 ரன்களை மட்டுமே இரண்டாவது இன்னிங்ஸில் அடித்தது. இதன்மூலம், இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்ற நிலையில், 1-1 என்ற கணக்கில் இந்தியாவும் தொடரை சமன் செய்தது. இன்னும் மூன்று போட்டிகள் தொடரில் மீதம் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பின்னர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் தரவரிசை (2023-2025 சுழற்சி) வெளியிடப்பட்டது.
அதில், இந்தியா இந்த சுழற்சியில் 6 போட்டிகளில் விளையாடி 3இல் வெற்றி, 2இல் தோல்வி மற்றும் 1 போட்டியை டிராவும் செய்துள்ளது. 38 புள்ளிகள் என்றாலும் தரவரிசையை தீர்மானிக்கும் புள்ளிகள் சதவீதம் அமைப்பில் (Points Percentage System) இந்தியா முன்னிலையில் உள்ளது. 52.77 புள்ளி சதவீதத்துடன் இந்திய அணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இங்கிலாந்து அணி 7 போட்டிகள் விளையாடி 3இல் வெற்றி, 3இல் தோல்வி மற்றும் ஒரு டிரா என 16 புள்ளிகளை பெற்றுள்ளது. மேலும், 33.33 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் உள்ளது. அதாவது கடைசிக்கு முந்தைய இடம்.
இந்தியா - இங்கிலாந்து அணிக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப். 15ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்க உள்ளது.