அரையிறுதியில் ஆப்கான்? - சச்சினுக்கு நன்றி சொன்ன இப்ராஹிம் சத்ரான்... ஏன் தெரியுமா?
நடப்பு உலகக் கோப்பை தொடரில் விறுவிறுப்பை கூட்டியதற்கு முக்கிய காரணம் ஆப்கானிஸ்தான் அணிதான். இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து என நான்கு அணிகளை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி அரையிறுதி ரேஸில் இருந்து வருகிறது.
அந்த வகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் ஆப்கானிஸ்தான் பேட்டிங்கில் 291 ரன்களை ஆஸ்திரேலியாவின் அசூர பௌலிங் யூனிட்டுக்கு எதிராக அடித்தது.
அதிகபட்சமாக இப்ராகிம் சத்ரான் 129 ரன்களை குவித்து அசத்தினார். இறுதிகட்டத்தில் ரஷித் கானும் அடிக்க நல்ல ஸ்கோரை ஆப்கான் எட்டியது.
தற்போது பந்துவீச்சிலும் ஆப்கான் மிரட்டி வருகிறது 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 98 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. ஆப்கன் வேகப்பந்துவீச்சாளர்கள் நவீன், ஓமர்சாய் பவர்பிளேயிலேயே நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆதிக்கத்தை செலுத்தினர்.
இது ஒருபுறம் இருக்க சதம் அடித்த சத்ரான் பேசுகையில்,"நான் நேற்று சச்சின் டெண்டுல்கருடன் நன்றாக உரையாடினேன், என்னால் வெளிப்படுத்த முடியாத பல அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். அவரது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டது எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. அதற்காக அவருக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
ஆப்கான் அணி நேற்று வான்கடே மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சச்சின் டெண்டுல்கர், அந்த அணி வீரர்களை சந்தித்து உரையாடினார். இது அவர்களுக்கு பெரிய ஊக்கமளித்தது என அந்த சந்திப்பின் போதே ரஷித் கான் பேசியிருந்தார். ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக மூத்த இந்திய வீரர் அஜய் ஜடேஜா பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால், ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி ஆப்கான் மூன்றாம் இடத்திற்கு முன்னேறும்.