விராட் கோலி உயிருக்கே ஆபத்தா... பயங்கரவாதிகளின் மிரட்டல்? - பரபரப்பு பின்னணி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. தற்போது பிளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
பிளே ஆப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன.
இப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.
இன்றைய போட்டியை முன்னிட்டு ஆர்சிபியின் பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்த அணி தரப்பில் எதுவும் அதிகாரப்பூர்வத் தகவல் தெரிவிக்கப்படவில்லை.
இருப்பினும், விராட் கோலியின் உயிருக்கு பயங்கரவாதிகள் தரப்பில் ஆபத்து இருப்பதால் ஆர்சிபியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டதாக குஜராத் போலீசார் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாக வங்கமொழி நாளிதழான 'ஆனந்தபஜார் பத்ரிகா' (Anandabazar Patrika) செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மே 20ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேரை குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் கைது செய்தனர். பிளே ஆப் சுற்றில் பங்கேற்க மூன்று அணிகள் அகமதாபாத் வந்த அன்று வந்த அந்த நால்வரையும், ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் சார்ந்த இடங்களில் போலீசார் சோதனை நடத்தியதில் ஆயுதங்கள், சந்தேகத்திற்கு இடமான வீடியோக்கள், மெசேஜ்கள் ஆகியவற்றை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து விஜய் சிங்க ஜ்வாலா என்ற குஜராத் காவல்துறை அதிகாரி கூறுகையில்,"அகமதாபாத்திற்கு வந்த பிறகு விராட் கோலி பயங்கரவாதிகள் என்ற சந்தேகிக்கப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டது குறித்து அறிந்துள்ளார். அவர் நாட்டிற்கே பொக்கிஷம், அவருடைய பாதுகாப்பே எங்களது அதிகபட்ச முன்னுரிமை. மேலும், ஆர்சிபி இந்த விஷயத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. பயிற்சிகள் ஏதும் இருக்காது என்று எங்களிடம் தெரிவித்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது, ஆனால் அவர்களுக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றனர். அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்" என்றார்.
தொடர்ந்து ஐபிஎல் வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.