ஆஸ்திரேலியாவுக்கு கிளம்புகிறாரா முகமது ஷமி...? காத்திருக்கும் இந்திய அணி - வந்தது அப்டேட்!
பார்டர் - கவாஸ்கர் தொடர் (Border Gavaskar Trophy) தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் போட்டியை வென்று தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான (India vs Australia) 2ஆவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் வரும் டிச. 6ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி பிங்க் நிற பந்தில் பகலிரவாக நடைபெற இருக்கிறது.
முதல் போட்டியை தனிப்பட்ட காரணங்களுக்காக தவறவிட்ட கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) அணியுடன் இணைந்துகொண்டார். Prime Minister's XI அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியிலும் அவர் பங்கடுத்தார். அடுத்த போட்டியில் கேப்டனாக செயல்படுவார்.
முதல் போட்டி கடந்த நவ.25ஆம் தேதியே நிறைவடைந்த நிலையில், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் (Gautam Gambhir) தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பினார். தற்போது மீண்டும் இந்திய அணியுடன் இணைந்துக்கொண்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு ரோஹித் சர்மா செல்லும் போதும் சரி, கௌதம் கம்பீர் செல்லும் போதும் சரி தங்களுடன் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியையும் (Mohammed Shami) அவர்கள் அழைத்துச் செல்வார்கள் என நம்பப்பட்டது. ஆனால், ஷமி தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பை (Syed Mushtaq Ali Trophy) தொடரில் கவனம் செலுத்தி வருகிறார்.
ரஞ்சி டிராபி போட்டியில் நன்றாக விளையாடியிருந்தாலும், டி20இல் அவரது பந்துவீச்சு எடுபடவில்லை. இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல அவர் தகுதியுடையவர்தான். அந்த வகையில், முகமது ஷமியை இந்திய அணி (Team India) தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தக்க சமயத்தில் அவர் ஆஸ்திரேலியா செல்வாரா மாட்டாரா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.
பெங்களூருவில் பிசிசிஐ சமீபத்தில் தொடங்கிய புதிய தேர்ச்சி மையத்தின் விளையாட்டு அறிவியல் பிரிவு தலைவர் நிதின் பட்டேல், டிரைனர் நிஷாந்த் பர்துலே, தேர்வுக்குழு உறுப்பினர் எஸ்எஸ் தாஸ் ஆகியோர் ராஜ்கோட் நகரில் தங்கி ஷமியை கண்காணித்து வருகின்றனர்.
விளையாட்டு அறிவியல் பிரிவில் இவருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டால் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கான டிக்கெட் கிடைக்கும். இல்லையெனில், இந்திய அணி, பும்ரா (Jasprit Bumrah) உடன் ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப், சிராஜ், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோரை நம்பிதான் விளையாட வேண்டும்.