Budget 2024... BSNL-க்கு உயிர் கொடுக்கும் மத்திய அரசு... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்..!
2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்: தேர்தல் வெற்றிக்கு பிறகு, பிரதமர் மோடி அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த நிலையில், நேற்று 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் தொலைத் தொடர்புத் துறைக்கு குறிப்பாக பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில்,பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூ.82,916 கோடி நிதியை பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் அதிக அளவில் கட்டணம் வசூலித்தாலும் அதன் நெட்வொர்க் சிறப்பாக உள்ளது என்பதை மறுக்க இயலாது. இந்நிலையில், குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கும் BSNL மற்றும் MTNL நிறுவனத்திற்கு மாறும் மக்கள் சிறந்த நெட்வொர்க் சேவையை பெறும் வகையில்,4ஜி, 5ஜி உள்கட்டமைப்புகள், தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொலைத்தொடர்பு திட்டங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ரூ.1.28 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இந்த தொகையில் பெரும்பகுதி பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவன மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
டெலிகாம் நிறுவனங்களில் டேட்டா என்னும் தரவு, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற அனைத்து வகையிலும் பிஎஸ்என்எல் வசூலிக்கும் மாதாந்திர ரீசார்ஜ் கட்டணங்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன. பிஎஸ்என்எல் வருடாந்திர திட்டங்களும் மற்ற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே இருக்கிறது.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 28 நாட்களுக்கு கொடுக்கும் சலுகைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் 30 நாட்களுக்கு கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வெறும் ரூ.153 மதிப்பிலான திட்டத்தை ரீசார்ஜ் செய்தாலே, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 26 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் குறிப்பிட்ட தொலைத் தொடர்பு உபகரணங்களின் பிரிண்டட் சர்க்யூட் போர்டுக்கான அடிப்படை சுங்க வரியை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தகவல் தொடர்பு சாதனங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் முக்கியமான கனிமங்களுக்கு விலக்கு ஆகிய சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஊழியர்களையும் உள்ளடக்கிய தொலைத்தொடர்புத் துறை ஊழியர்களின் ஓய்வூதியப் பலன்களுக்காக ரூ.17,510 கோடி ஒதுக்கவும் மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், ஸ்மார்ட்போனின் உதிரிபாகங்களுக்கான அடிப்படை சுங்க வரியை 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் போன்களை உற்பத்தி செய்வதற்கான செலவை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த அறிவிப்பு, தொழில்துறையினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.