இரட்டிப்பாகும் ஓய்வூதிய தொகை: பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய குட் நியூஸ்
ஜூலை 23 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பிரதமர் மோடி தலைமையிலான எண்டிஎ அரசாங்கம் மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இந்த மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட் இது என்பதால் மக்களிடம் எதிர்பார்ப்புகளும் அதிகமாக உள்ளன.
அனைத்து துறைகளும் தங்கள் கோரிக்கைகளை நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளன. கடந்த சில வாரங்களில் நடந்த பல கட்ட கூட்டங்களில் நிதி அமைச்சர் (Nirmala Sitharaman) பல்வேறு துறைகளில் பிரதிநிதிகளை சந்தித்தார். முழு பட்ஜெட் வரைவு தயாரிக்கப்படும் முன் இந்த கோரிக்கைகள் கருத்தில் கொள்ளப்படும்.
இந்த பட்ஜெட்டில் சில குறிப்பிட்ட அறிவிப்புகள் நிச்சயமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. சம்பள வர்க்கத்தினருக்கு நிம்மதி அளிக்கும் வகையிலான வரிச் சலுகைகள், வரி அடுக்குகளில் மாற்றம், மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணங்களில் சலுகை, வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகை, அடல் ஓய்வூதிய திட்ட தொகை அதிகரிப்பு ஆகியவை இவற்றில் சில. இதில் அதிக ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள அடல் பென்ஷன் திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
அடல் ஓய்வூதியத் திட்டத்தில் அரசாங்கம் சில முக்கிய மாற்றங்களைச் செய்யலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இதில் அளிக்கப்படும் உதவித்தொகை இரட்டிக்கப்படக்கூடும் என கூறப்படுகின்றது.
முன்னதாக, பெப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலேயே இதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. பிப்ரவரி பட்ஜெட்டுக்கு முன்னால் இதை பற்றிய பேச்சு அதிகமாக இருந்தது. எனினும், அந்த பட்ஜெட்டில் இதற்கான எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆனால், இந்த முறை கண்டிப்பாக அடல் ஓய்வூதிய திட்டத்தின் தொகை அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடல் ஓய்வூதிய திட்டத்தின் அதிகபட்ச ஓய்வூதியத் தொகை தற்போது ரூ.5,000 ஆக உள்ளது. இதை இரு மடங்காக்கி, அதாவது ரூ.10,000 ஆக உயர்த்தி அரசு அறிவிக்கக்கூடும். இந்த முன்மொழிவு குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன. பட்ஜெட்டின் போது அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என கூறப்படுகின்றது.
முன்னதாக, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) தலைவர் தீபக் மொகந்தி, அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ் உத்தரவாத ஓய்வூதியத் தொகையை அதிகரிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த தொகை அதிகரிக்கப்பட்டால், அது பயனாளிகளுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும்.
அடல் ஓய்வூதியத் திட்டம் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பாதுகாப்பை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இதில் முதலீடு செய்யலாம். 60 வயதுக்கு பிறகு அவர்களுக்கு உத்தரவாதமான ஓய்வூதியம் கிடைக்கும். உறுப்பினர்களின் பங்களிப்புக்கு ஏற்ப இதில் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் கிடைக்கும். இந்த அதிகபட்ச தொகை, இந்த பட்ஜெட்டில் ரூ.10,000 ஆக அதிகரிக்கலாம்.
அடல் பென்ஷன் யோஜனா அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பாதுகாப்பை வழங்குகிறது. இது இவர்களுக்கு சேமிப்பு பழக்கத்தையும் கற்றுக்கொடுக்கிறது. உறுப்பினர் இறந்தாலோ, அல்லது அவருக்கு ஏதேனும் கடுமையான நோய் ஏற்பட்டாலோ, APY திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் 100 சதவீதத்தை 60 வயதில் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அடல் ஓய்வூதிய திட்டத்தின் தொகை அதிகரிக்கப்படுவதற்கான எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் முழுமையான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அரசாங்க தளங்களை அணுகுமாறு அறிவ்வுறுத்தப்படுகின்றது.