Budget 2024: முதல்முறை ஊழியர்களுக்கு கூடுதலாக ஒருமாத சம்பளம்... வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய திட்டங்கள்

Wed, 24 Jul 2024-10:33 am,

இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அறிவுப்புளை நிதி அமைச்சர் வெளியிட்டார். குறிப்பாக, பெண்கள், தொழில்துறை, வேலைவாய்ப்பு, வரி விதிப்பு ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

பட்ஜெட் 2024 -இல், நிறுவனங்கள் ஊழியர்களை வேலையில் சேர்ப்பதை அதிகரிக்கும் விதமாக, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ், மூன்று வேலைவாய்ப்பு தொடர்பான ஊக்கத் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று அறிவித்தார். இந்த திட்டங்களின் மூலம் பணியமர்த்தலை அதிகரிப்பதே முக்கிய நோக்கமாக உள்ளது. இந்த திட்டங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

“பிரதமரின் தொகுப்பின் ஒரு பகுதியாக வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைக்கான பின்வரும் மூன்று திட்டங்களை எங்கள் அரசாங்கம் செயல்படுத்தும்: EPF இல் பதிவுசெய்தல், முதல் முறையாக பணியாளர்களை சேர்த்து அங்கீகரிப்பதில் கவனம் செலுத்துதல் மற்றும் பணியாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கான ஆதரவு திட்டம்” என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். 

பணியமர்த்தலை ஊக்குவிக்க 3 திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முதல் திட்டத்தின் கீழ் புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒரு மாத ஊதியம் அளிக்கப்படும், இரண்டாவது திட்டத்தின் கீழ், உற்பத்தித் துறையில் அதிக வேலைகள் உருவாக்கப்படும், முன்றாவது திட்டத்தின் கீழ் முதலாளிகள் / நிறுவனங்களுக்கான உதவி/ஊக்கத்தொகை அளிக்கப்படும். இந்த திட்டங்கள் அனைத்தும் முதல் முறையாக வேலைக்கு சேர்ந்து EPFO -இல் சேரும் பணியாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. 

Scheme A: இந்த திட்டம் மாதம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவான சம்பளத்துடன் பணியிடத்தில் முதல் முறையாக சேரும் பணியாளர்களுக்கு ரூ.15,000 வரை ஒரு மாத ஊதியத்தை மானியமாக வழங்குகிறது. மானியம் மூன்று தவணைகளில் வழங்கப்படும். இரண்டாவது தவணையைப் பெற, பணியாளர் கட்டாய ஆன்லைன் நிதி கல்வியறிவு படிப்பை (Financial Literacy course) முடிக்க வேண்டும். 12 மாதங்களுக்குள் வேலை முடிவடைந்தால், மானியத்தை முதலாளி திருப்பித் தர வேண்டும். இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு பொருந்தும்.

Scheme B: EPFO ​​பங்களிப்புகளின் மூன்று வருட பதிவைக் கொண்ட அனைத்து கார்ப்பரேட் மற்றும் கார்ப்பரேட் அல்லாத நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். இந்தத் திட்டம் உற்பத்தித் துறையில் புதிய பணியாளர்களை கணிசமாக பணியமர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்கு தகுதி பெறுவதற்கு, நிறுவனங்கள் 50 புதிய பணியாளர்களையோ அல்லது அவர்களின் தற்போதைய பணியாளர்களில் 25% பேரையோ இதன் கீழ் பணியமர்த்த வேண்டும்.

Scheme C: பேஸ்லைனை விட தங்கள் மொத்த பணியாளர் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் இரண்டு பணியாளர்களை (50க்கும் குறைவான பணியாளர்கள் உள்ளவர்கள்) அல்லது 5 பணியாளர்களை (50 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் உல்ளவர்கள்) அதிகரித்து அந்த எண்ணிக்கையை பராமரிக்கும் நிறுவனங்களை / முதலாளிகளை இந்தத் திட்டம் ஆதரிக்கிறது. மாதம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இத்திட்டம் பொருந்தும். இரண்டு ஆண்டுகளுக்கு, முந்தைய ஆண்டில் பணியமர்த்தப்பட்ட கூடுதல் பணியாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 3,000 வரை ​​முதலாளி / நிறுவனத்தின்  EPFO பங்களிப்புகளை அரசாங்கம் திருப்பிச் செலுத்தும். Scheme B -இன் கீழ் உள்ள ஊழியர்களுக்கு இது பொருந்தாது.

 

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்கள், முதல் முறையாக வேலைக்கு சேரும் பணியாளர்கள், பணியமர்த்தும் நிறுவனங்கள் என இரு தரப்பிற்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த திட்டங்களின் மூலம், பணியமர்த்தலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்கான மட்டுமே எழுதப்பட்டுள்ளது.  சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link