கார் கடன் வாங்கப்போறீங்களா? மலிவான கார் கடன்களை பெற டாப் டிப்ஸ் இதோ
முதலில் நீங்கள் வாங்க விரும்பும் காரின் விலை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எந்த கால அளவில் நீங்கள் கடன் தவணையை எளிதான கட்டணத்தில் திருப்பிச் செலுத்த முடியும் என்பதை கணக்கிட வேண்டும். உங்கள் காரின் ஈ.எம்.ஐ-ஐ உங்கள் மாத சம்பளத்தில் 15 % ஆக வைத்திருப்பது இதற்கான எளிதான வழியாக இருக்கும்.
வங்கிகள் பெரும்பாலும் உங்கள் சம்பளத்தை மனதில் வைத்து கார் கடன்களை வழங்குகின்றன. மறுபுறம், ஒரு கார் கடனைக் கொடுக்கும் போது, காரின் விலையில் 80 முதல் 90 சதவிகிதம் மட்டுமே வங்கி வழங்குகிறது. அதில் மீதமுள்ள தொகையை நீங்கள் அளிக்க வேண்டும். ஆகையால், கார் வாங்கும் எண்ணத்தில் இருந்தால், அதற்கு முன்னர், நீங்கள் சேமிப்பை சிறிது அதிகரித்து நல்ல தொகையை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இப்படி செய்தால், கார் கடனின் அளவை நீங்கள் குறைக்கலாம். கார் வாங்கும்போது டவுன் பேமெண்டாக சுமார் 20 முதல் 30 சதவிகிதம் அளிப்பதன் மூலமும் கார் கடன் தொகையை குறைக்கலாம்.
தற்போது, மலிவு விலையில் கார் கடன்களை வழங்கும் வங்கிகளில் பாங்க் ஆப் பரோடா முன்னிலையில் உள்ளது. பேங்க் ஆப் பரோடா கார் கடன்களை 7.25 சதவீதம் என்ற விகிதத்தில் வழங்கி வருகிறது. இதற்குப் பிறகு, கனரா வங்கி 7.30 சதவீத வருடாந்திர வீதத்தில் கடன்களை வழங்கி வருகிறது.
நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (SBI) வாடிக்கையாளர்களுக்கு கார் கடன் 7.70 சதவீதத்தில் கிடைக்கிறது. அடுத்ததாக, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு 7.90 சதவீதம் என்ற விகிதத்தில் கடன்கள் வழங்கப்படுகின்றன. ஆக்சிஸ் வங்கியில் 8.65 சதவீதமும், ஃபெடரல் வங்கியில் கார் கடனுக்கு 8.50 சதவீத வருடாந்திர வட்டியும் வசூலிக்கப்படுகின்றன.