PMAY 2.0: புதிய வீடு கட்ட ரூ. 2.5 லட்சம் தரும் மத்திய அரசு! எப்படி விண்ணப்பிப்பது?
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY 2.0) திட்டத்தின் இரண்டாம் கட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் நகர்ப்புறங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடு கட்ட நிதியுதவி வழங்கப்படும்.
நகர்ப்புறங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. PMAY 2.0ன் கீழ் மத்திய அரசாங்கம் 1 லட்சம் புதிய வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2.30 லட்சம் நிதி மானியம் வழங்கப்படும்.
இதற்கு முன்பு இந்த திட்டத்தின் கீழ் 1.18 லட்சம் வீடுகள் அங்கீகரிக்கப்பட்டதாகவும், 8.55 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியான மக்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுகிறது. நகர்ப்புற மக்களுக்கான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் கிராமப்புற மக்களுக்கான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் (ரூ 3 லட்சம் முதல் ரூ 6 லட்சம் வரை), சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த திட்டத்தின் கீழ் வீடு வாங்க அல்லது கட்ட தகுதியுடையவர்கள்.