தோனி விளையாட இந்த ரூல்ஸ் வேணும்... சிஎஸ்கேவின் அதிரடி கோரிக்கை - ஓகே சொல்லுமா பிசிசிஐ?
2025 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன், மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மெகா ஏலம் என்பது அனைத்து அணிகளுக்கும் அதன் கட்டமைப்பில் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது.
அந்த வகையில், இந்தாண்டுக்கான மெகா ஏலம் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மெகா ஏலத்தை 5 ஆண்டுக்காலத்திற்கு ஒருமுறை தான் நடத்த வேண்டும் என்பது தொடங்கி மெகா ஏலமே வேண்டும், மினி ஏலம் மட்டும் போதும் என்ற அளவிற்கு வந்துவிட்டது.
அதுமட்டுமின்றி தற்போதைய விதியின்படி ஒரு அணி நான்கு வீரர்களை தக்கவைக்கலாம். அதில் மூன்று இந்தியர்கள் + 1 வெளிநாட்டவர் அல்லது 2 இந்தியர்கள் + 2 வெளிநாட்டு வீரர்கள் இப்படிதான் வீரர்களை தக்கவைக்க முடியும். இந்த விதியிலும் பல ஐபிஎல் அணிகள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.
இந்த விதிகள் குறித்து முடிவெடுப்பதற்கு 10 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுக்கும், பிசிசிஐ - ஐபிஎல் நிர்வாகிகளுக்கும் இடையில் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்றது. இதில் 9 அணிகளின் உரிமையாளர்களும் நேரில் கலந்துகொண்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களான அம்பானி குடும்பத்தார் மட்டும் பாரிஸில் இருப்பதால் காணொலிக் காட்சியின் மூலம் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
7 வீரர்களை தக்கவைக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், RTM ஆப்ஷனையும் தனியே வழங்க வேண்டும் என்றும் எஸ்ஆர்ஹெச் உரிமையாளர் காவ்யா மாறன் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் என கூறப்படுகிறது.. அந்த 7 வீரர்களிலும் இந்திய வீரர், வெளிநாட்டு வீரர் கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாது என்றும் கேட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது. பல அணிகளின் உரிமையாளர்களும் இதுபோன்று பல கோரிக்கைகளை வைத்திருக்கின்றனர்.
அந்த வகையில், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பிலும் பிசிசிஐயிடம் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதில் முக்கியமான ஒன்று, ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆகிவிட்டால், அவரும் Uncapped வீரராக கருதப்பட வேண்டும் என்ற விதியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. 2008ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டு வரை இந்த விதி இருந்தது.
அதன்பின், கடந்த மெகா ஏலத்தில் இந்த விதி நீக்கப்பட்ட நிலையில், இந்த விதியை தற்போது கொண்டுவருவதன் மூலம், தோனியை Uncapped வீரராக தக்கவைத்துக்கொள்ள சிஎஸ்கே திட்டமிடுகிறது. அதாவது, தற்போதைய விதியின்படி ஒரு Uncapped வீரரை ரூ.4 கோடி கொடுத்து தக்கவைத்தால் போதுமானதாகும். எனவே, சிஎஸ்கே இந்த விதியை மீண்டும் கொண்டு வர கோருகிறது. 4க்கும் மேல் வீரர்களை தக்கவைக்கும் அது கோரிக்கை வைத்திருக்கிறது.
ஐபிஎல் விதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே, அடுத்த சீசனில் விளையாடலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வேன் என்றும் அணியின் நலனே முக்கியம் என்றும் ஹைதராபாத்தில் சமீபத்தில் தோனி பேசியிருந்தார். அந்த வகையில், பார்த்தோமானால் ஒரு லாஸ்ட் சீசனாக, கடந்த சீசனில் அடைந்த ஏமாற்றத்தை நிவர்த்தி செய்ய தோனி மீண்டும் என்ட்ரி கொடுப்பார் என்றே பலரும் கருதுகின்றனர். காத்திருப்போம்...