ஆண்களில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் அபாயத்தை பக்காவா குறைக்கும் பச்சை உணவுகள்
கொலஸ்ட்ரால் ஒரு மென்மையான ஒட்டும் பொருளாகும். இது இரத்தத்தின் நரம்புகள் மற்றும் செல்களில் காணப்படுகிறது. நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு நல்ல கொலஸ்ட்ரால் அவசியம். எனினும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் மாரடைப்பு, டைப் 2 நீரிழிவு, பக்கவாதம் ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன. ஆண்களுக்கு கொலஸ்ட்ராலைக் குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில பச்சை உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கீரை வகைகளில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் உள்ள லுடீன், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை எல்டிஎல் கொழுப்பின் அளவை திறம்பட குறைக்கின்றன. தினசரி உணவில் கீரையை உட்கொள்வது இரும்புச்சத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
கேலே தமிழகத்தில் பரட்டை கீரை அல்லது சுருட்டை கீரை என்ற பெயர்களில் அறியப்படுகின்றது. இது மிக அதிக சத்துக்கள் நிறைந்த பச்சை காயாக பார்க்கப்படுகின்றது. இதில் ஆண்டிஆக்சிடெண்டுகள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதை நம் உணவில் சேர்த்துக்கொள்வதால் LDL கொழுப்பின் அளவு குறைகிறது. இது இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.
கிளைக்கோசு எனப்படும் பிரஸ்ஸல்ஸ் முளைகளில் எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது ஊட்டச்சத்தின் களஞ்சியமாக பார்க்கப்படுகின்றது. இதில் அதிக அளவு நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிரம்பியுள்ளன. இதன் பண்புகள் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றன.
ப்ரோக்கோலி, அதிக கொழுப்புக்கு எதிராக செயல்படும் பல பண்புகள் கொண்ட ஒரு காயாகும். இதில் நார்ச்சத்து, ஆண்டிஆக்சிடெண்டுகள், வைட்டமின்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இது உடலில் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இது மட்டுமின்றி இது இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
கிரீன் டீயில் ஆண்டி ஆக்சிடெண்ட் பண்புகள் அதிகமாக உள்ளன. இதில் உள்ள கேட்டசின்கள் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைப்பதிலும் இதயத்தைப் பாதுகாப்பதிலும் பங்கு வகிக்கிறது. க்ரீன் டீயை உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை வெகுவாக மேம்படுத்துகின்றது.
அவகேடோ: அவகேடோ கொலஸ்ட்ராலை குறைக்க பல வழிகளில் உதவும் ஒரு பழமாகும். கொலஸ்ட்ராலை மேம்படுத்தும் திறன்களைக் கொண்ட இது ஒரு சூப்பர்ஃபுட் ஆக பார்க்கப்படுகின்றது. மோனோ-நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் பொட்டாசியம் கொண்ட அவகேடோ HDL அதாவது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து LDL அதாவது கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.