நோயற்ற வாழ்விற்கு.... தினமும் 15 நிமிடங்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால் போதும்...
உடற்பயிற்சி: நோய் நொடி இல்லாத வாழ்க்கை வாழ, உடற்பயிற்சி அவசியம். ஆனால் இன்றைய துரித கதீலான வாழ்க்கை முறையில், உடற்பயிற்சி செய்ய யாருக்கும் நேரம் இருப்பதில்லை. பயிற்சி செய்ய நேரம் இல்லை என்றாலும், கிடைத்த சிறிது நேரத்தில், 15 நிமிடங்கள் படி ஏறி இறங்கும் பயிற்சி செய்தால், அதனால் கிடைக்கும் நன்மைகள் வியக்கத்தக்க வகையில் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
படி ஏறி இறங்குதல்: தினமும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதை வழக்கமாகக் கொண்டால், அதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், லிஃப்ட் எஸ்கலேட்டர் போன்றவற்றை பயன்படுத்தாமல், படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதால், இதயம் நுரையீரல், மூளை என அனைத்துமே செட்டாக இருக்கும்.நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.
இதய ஆரோக்கியம்: படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது சிறந்த கார்டியோ வேஸ்குலர் பயிற்சி என்று, மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் உடலில் இருக்கும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிப்பதோடு, இதய தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும், கெட்ட கொலஸ்ட்ரால் குறைகிறது.
மூளை ஆரோக்கியம்: தினமும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது, உடலுக்கும் மூளைக்கும் புத்துணர்ச்சியை கொடுத்து, மன அழுத்தத்தை குறைக்கும் என்டோர்பின் வெளியீட்டை தூண்டுகிறது. இதனால் பதற்றம் குறைந்து, மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
நுரையீரல் ஆரோக்கியம்: தினம் சில நிமிடங்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதால், நுரையீரலுக்கு செல்லும் ரத்த ஓட்டம் மேம்பட்டு, சுவாச பிரச்சனைகள் மற்றும் கோளாறுகளிலிருந்து உதவும். நுரையீரல் செயல்பாடும் மேம்படும்.
தசை ஆரோக்கியம்: படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதால், கால்கள் கணுக்கால்கள், வயிறு, இடுப்பு ஆகிய இடங்களில் உள்ள தசைகள் வலுவாகி, உடல் பிட்டாக இருக்கும். பொதுவாக, எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், தசை ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தசைகள் வலுவிழந்தால், நமது உடல் செயல்பாடு முடங்கும் அளவிற்கு பிரச்சனைகள் தீவிரமாகலாம்.
உடல் சுறுசுறுப்பு: தினமும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதால், உடலில் உள்ள மந்த நிலை நீங்கி, சுறுசுறுப்பாக செயல்படும். மேலும் உடலில் ரத்த ஓட்டம், சீராக இருக்கும் என்பதால், மூளை அலர்டாக இருக்கும். அதோடு மனவலிமையும் மேம்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
எலும்பு ஆரோக்கியம்: தினம் சில நிமிடங்கள் படிக்கட்டில் ஏறி இறங்குவது எலும்பு களுக்கான சிறந்த பயிற்சியாக கருதப்படுகிறது. இது எலும்பு அடர்த்தியை அதிகரிப்பதால், மூட்டு வலி மற்றும் எலும்பு மெலிதல் என்னும் ஆஸ்டியோ ப்ரோசிஸ் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.