‘காதலிக்க நேரமில்லையா? லவ் லீவ் எடுத்துக்கோங்க’ என்று கூறும் நிறுவனங்கள்
சீனாவில் பெண்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இயந்தரத்தனமான வாழ்க்கை முறையும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. சொந்த வாழ்க்கைக்கு அவர்களிடம் நேரம் இல்லாத சூழல் உள்ளது. அங்குள்ள அலுவலகங்களில் பெண்களுக்கு விடுமுறை அளிக்க ஒரு சிறப்பு வழிமுறையைத் துவக்கும் அளவுக்கு இந்த பிரச்சனை அதிகரித்துள்ளது.
இந்த ஏற்பாடு பற்றி 2019 இல் பேசப்பட்டது. ஆனால் இன்றும் கூட பெண்கள் பல அலுவலகங்களில் காதல் விடுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்ற வசதி உள்ளது. இதற்கான ஒரே நிபந்தனை என்னவென்றால், பெண் ஊழியர் திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும், அவரது வயது சுமார் 30 ஆக இருக்க வேண்டும்.
கிழக்கு சீனாவின் ஹாங்சோவில் உள்ள நிறுவனங்கள் தங்கள் பெண் ஊழியர்களுக்கு 'டேட்டிங் லீவ்' கொடுத்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. 2019 இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இன்றும் பல நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள சிங்கிள் பெண்களுக்கு பொருந்தும். இந்த விடுமுறைகள் 'லவ்-லீவ்’ அதாவது ‘காதல்-விடுமுறை’ என்று அழைக்கப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளில், சீனாவில் தனியாக, சிங்கிளாக இருக்கும் போக்கு வேகமாக அதிகரித்து வருகிறது. மக்கள் தங்கள் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக திருமணங்களை பிணைப்பாக கருதத் தொடங்கினர். அத்தகைய சூழ்நிலையில், இப்போது அங்குள்ள அரசாங்கமும் மக்கள் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற வேண்டும் என்று விரும்புகிறது. அதனால்தான் பெண்களுக்கு உண்மையான அன்பைக் கண்டறிய விடுமுறை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
சீனாவில் சமூக அறிவியல் அகாடமியின் திட்டத்தின் அறிக்கையின்படி, நாட்டில் உள்ள மக்கள் தொகை வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதன் காரணமாக, அடுத்த 50 ஆண்டுகளில், சீனாவின் மக்கள் தொகை 140 மில்லியனிலிருந்து 120 மில்லியனாக குறையும். இந்தக் கவலையின் காரணமாக, அலுவலகங்களில் பெண்களுக்கு இத்தகைய விடுப்பு வழங்க அரசாங்கம் திட்டமிட்டது. பெண்கள் திருமண பந்தத்தில் இணைந்து குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்.